மது என்ற அரக்கன்
ஒருவன்
மது குடித்தால்
பேதைபோல் மாறுவான்
பித்தன்போல் சீறுவான்
பேய்போல் ஆடுவான்
நோய்தேடி ஓடுவான்
கொலைசெய்யத் தூண்டுவான்
கொள்ளைகொள்ள வேண்டுவான்.
மனிதனின் மரபணுவையே
மாற்றக்கூடிய
மாபெரும் அரக்கன்
மதுவென்ற அரக்கன் !
ஒரு காலத்தில்
ரகசியமாய் இருந்த மது
இப்போது
அம்பலத்துக்கு வந்து
ஆட்டம் போடுகிறது !
என் தாயே
எனக்கு விஷம்
தருவதுபோல்
அரசே நடத்தும்
மதுபானக்கடை!
ஒருவன்
டாஸ்மாக் கடையில்
நெப்போலியன் வேண்டுமென்று
நினைவுபடுத்திக் கேட்கிறான்
மகாத்மா காந்தியை
மடித்துக் கொடுத்துவிட்டு !
இப்போது
அவனுக்குள் இருந்த
அஹிம்சை
ஆயுதமானது!
மினரல் வாட்டர்போல்
சென்ற என் நண்பன்
இப்போது
சாராயக்கடையில்
சாக்கடையாய் !
கன்றுக் குட்டிகளைப் போல்
துள்ளிக் குதித்த
எம் காளையர் கூட்டம்
மது அருந்தியபின்
பன்றிக் குட்டிகளாய்
பாதையோர சாக்கடையில் !
குடித்தவனுக்குத் தெரியும்
மீண்டும் குடிப்பதற்கு
குடம்குடமாய்
தண்ணீர் வேண்டும்!
நீயும் குடித்தால்
நிலத்தடி நீர் குறைய
நீயும் ஒரு காரணம் !
என்ன ஒரு வேலை !
படித்தவனுக்கு
டாஸ்மாக்கில்
கல்லாப்பெட்டி !
அந்த
மதுவென்ற அரக்கன்
அரசுக்கு வேண்டுமானால்
குபேரன் !
ஆனால் ...
குடும்பத்தில் குழந்தையை
தொழிலாளியாக்கும்
கொடூரன் !
குடிகாரன் கையில்
குலவிளக்கும்
குத்துபடும் விளக்குதான் !
இந்த மதுவால்
தற்கொலைப் படையைவிட
படைபடையாய் தற்கொலைகள் !
அரசைக் கேட்டால்
அரசு சொல்கிறது
கள்ளச் சாராயததை ஒழிக்க
இது கருத்தான வழியென்று!
அதனால் மக்களே ,
கள்ளக்காதலை ஒழிக்க
கடை கேட்காதீர்கள் !
பேருந்துகளை
அரசுமயமாக்கி
நடுத்துகின்ற அரசாங்கமே !
பெரிய ஓட்டல்களை
அரசுமயமாக்கி ஒட்டுங்கிளேன்!
நீதி மன்றமே
உனக்கு நீதி இல்லையா !
கொலை செய்தவனக்கு
மரண தண்டனை!
கொலை செய்யத் தூண்டிய
மதுவிற்கு
என்ன தண்டனை !