தேவதைகள் விற்பனைக்கு

தேவதைகள் விற்பனைக்கு உண்டு
சிவப்பு விளக்கு பகுதியில்...

முகத்தில் சாயம் பூசி
முந்தானையை சரி செய்து
நாள்தோறும் தயாராகிறார்கள்
வன்முறையை எதிர்கொள்ள...

மணமும் குணமும்
இருந்தும் கூட
இந்த பூக்கள் மட்டும் ஏனோ
மயானத்தில் வெந்து திரும்புகிறது
தினந்தோறும்...

காந்தி படம் போட்ட
காகிதங்களால்
விலை படிக்கிறது...
நல்ல வேலை
காந்தி உயிரோடு இல்லை...

நிமிடங்களில்
நின்று போகும் உணர்ச்சிகளுக்காக
நிதம்தோறும் சாகிறது பெண்மை - அந்த
வெப்பத்தில் வேகிற சோறு
செரித்து யாருக்கோ
வலித்தது இவளுக்கு மட்டும்தான்...

அழுக்கைத் தின்று
தொட்டியை சுத்தம் செய்யும்
இந்த மீன்கள்
கடலை துரத்தில் இருந்தே பார்க்கிறது
கடலும் துரத்தில் வைத்தே பார்க்கிறது...
மீன்கள் செய்வது பாவமென்றால்
நீங்கள் செய்வது புண்ணியமோ?

ஆங்கிலேயன் ஏற்றி வைத்த விளக்கு
இன்று வரை எரிகிறது
ஏளனமாய் சிரித்தபடி
அணைக்க துப்பில்லாத அரசாங்கம்
ஆணுறை விற்கிறதே பெரும்சாபம்

'அம்மா' என்று
குழந்தை தழுவிய தேகம்
ஐயோவென கதறித் துடித்த போது
காப்பாற்ற நீளாத கரங்கள்
ஊனத்தின் வெளிப்பாடு - நம்
தேசத்தின் சாபக்கேடு...

எழுதியவர் : செல்வா பாரதி (26-Jan-14, 10:06 pm)
சேர்த்தது : செல்வா பாரதி
பார்வை : 65

மேலே