தலைமுறைக்கு ஒரு பாப்பா பாட்டு

ஆறுகள் காய்ந்துவிட்டது பாப்பா
மணல் மேடுகள்
மாயமாய் மறைந்ததுவே பாப்பா..!!
காடுகள் காணவில்லை பாப்பா
கொஞ்சி விளையாடிய
மிருகங்களும் மாய்ந்ததுவே பாப்பா..!!
ஏரிகளை இழந்துவிட்டோம் பாப்பா
அலை ஓடிய
நீரெல்லாம் கானலானதுவே பாப்பா..!!
குளங்கள் குப்பையானது பாப்பா
அடி நிலம்
தண்ணீரின்றி தரிசானதுவே பாப்பா..!!
மலைவளம் குறைந்ததுவிட்டது பாப்பா
மேகம் தடுத்து
மழைதராமல் உடைந்துவிட்டது பாப்பா..!!
விதைகளை உடைத்துவிட்டோம் பாப்பா
மரபுவழி செய்தியெல்லாம்
கூண்டோடு அழித்துவிட்டோம் பாப்பா..!!
மண்ணையும் மலடாக்கினொம் பாப்பா
உரம் என்னும்
நஞ்சுதன்னை கொட்டிவைத்தோம் பாப்பா..!!
மண்புழு அழிந்துவிட்டது பாப்பா
மறு சுழற்சி
செய்திடவே ஆளில்லையே பாப்பா..!!
உனக்காக பணம் சேர்க்கவே பாப்பா
மாபெரும் தவறுகள்
செய்கின்றோம் சின்ன பாப்பா..!!
பணமதனை உட்கொண்டு பாப்பா
இந்த வையகத்தில்
வாழ்ந்திட முடியாது பாப்பா..!!
திருந்திவாழ நினைத்தாலும் பாப்பா
சீர்கெட்ட சமூகம்
விடுவதில்லை செல்ல பாப்பா..!!
நீ என்ன செய்வாயடி பாப்பா
எங்கள் பாவங்களை
எப்படி போக்குவாய் பாப்பா..!!
சிந்தனை செய்யடி என் பாப்பா
காலம் கடந்துவிட
போகிறது தங்க பாப்பா..!!
உணர்ந்து சொல்கின்றேனடி பாப்பா
உன் தலைமுறை
புவிவாழ வழிதேடு பாப்பா..!!