மிதிலை
மிதிலை (சனகபுரி) - சீதா ஜன்ம பூமி:
அன்னை சீதை அவதரித்த புண்ணிய பூமி மிதிலை. சனக மன்னனின் பெயரால் இத்தலம் சனகபுரி என்றும் அழைக்கப் படுகிறது. குழந்தை வடிவு கொண்டு, நில மகளின் மடியில், ஒரு தங்கப் பேழையினுள் கோடி சூர்ய பிரகாசமாய் காட்சி அளித்த அன்னை சீதையை சனகர் கண்டெடுத்தது மிதிலா நகர் என்னும் இத்தலத்தில் தான்.
அயோத்தியில் இருந்து 300 மைல் தொலைவில் நேபாள தேசத்தில் அமைந்து உள்ளது சிறப்பு மிக்க தலமான சனகபுரி. சனக மன்னர் குழந்தை மைதிலியை கண்டெடுத்த இடத்தில் 'ஜானகி மந்திர்' என்று அறியப்படும் பிரமாண்டமான திருக்கோயில் எழுப்பப் பட்டுள்ளது. இக்கோயிலின் அருகே ஸ்ரீராமரின் ஆலயத்தையும் தரிசித்து மகிழலாம்.
ஸ்ரீராமருக்கும் சீதா பிராட்டியாருக்கும் விவாகம் நடந்த இடத்தில் பெரியதொரு விவாக மண்டபம் எழுப்பப் பட்டுள்ளது. இத்தலத்தின் புண்ணிய தீர்த்தம் 'கங்கா சாகர்' என்று அழைக்கப் படுகிறது. மிதிலையில் இருந்து 18 மைல் தொலைவில் 'தனுஷ் சாகர்' என்ற இடம் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் ஸ்ரீராமர் முறித்த பிரமாண்ட வில்லின் சிதிலம் அடைந்த நிலையில் இருக்கும் பகுதியைக் கண்டு மகிழலாம். கார்த்திகை மாதம் நடைபெறும் 'விவாக பஞ்சமி' என்ற சீதா - ராம திருமண வைபவத்தை தரிசிக்க லட்சக் கணக்கில் மக்கள் இத்தலத்தில் கூடுவர். ஸ்ரீராம நவமியும் இத்தலத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
அன்னை சீதையின் அவதாரத் தலமாகவும், ஸ்ரீராமரின் திருவடிகள் பதிந்த பவித்தரமான தலமாகவும் விளங்கும் சனகபுரியை கட்டாயம் தரிசித்துப் பயன் பெறுவோம்.