உனக்கு மட்டும் இரகசியம் சொல்வேன்

கனவுத்திரையின் காட்சிப்பிழைகள்
கலக்கம் கொண்ட உறக்க நிலைகள்
கண்விழித்து எழும் முதல் கணங்கள்
காப்பிச் சூட்டின் சுகவாசம்..

கண்கூசி நிற்கும் சூரிய வணக்கம்
அக்காள் மகளின் சோம்பல் சினுங்கல்
பக்கத்து வீட்டு குழந்தையின் அழுகுரல்
வெந்நீர் கொண்ட இளஞ்சூடு

ஆடை வண்ணம் தேடும் விரல்நுனிகள்
கண்ணாடி முன் நின்றாடும் நர்த்தனங்கள்
கோபம் கொண்டு சண்டையிடும் அண்ணன் முகம்
பேருந்து பிடிக்க பதறி ஓடும் கணங்கள்

சகபயணியாய் பின்தொடரும் ஒருதலை காதலன்
அவனை பிடிக்கவில்லை என்ற செய்திக் குறிப்பு
பணியின் இடையில் தேநீர் நேரம்
வடை மிளகாய் கடித்த காரம்

அன்னை கொடுத்தனுப்பிய வத்தக்குழம்பு வாசனை
அதில் ஊறிய வத்தலின் தேன்சுவை
உறக்கக் களைப்புகள்
தோழியின் அரட்டைக் கதைகள்

வீடு திரும்பியதும் கொண்ட பெரும் பசி
பசிபோக்க உட்கொண்ட சிற்றுண்டி

அலைகடல் தாண்டிச் சென்ற
அப்பாவின் அலைபேசி அழைப்பு
எனக்குப் பிடிக்குமென அவர் அனுப்பிய
ஆல்மண்ட் சாக்லெட்டின் சங்கதித் தூது

சிறு புன்னகை பெரும் கோபங்கள்
ஏக்கம் ஏமாற்றம் இன்பம் துன்பம்
அழுகைகள் ஆச்சர்யங்கள்
வெட்டிக் கதைகள் ஒன்றுமில்லா செய்திகள்

இப்படி அன்று நடக்கும்
அத்தனை நிகழ்வுகளையும்
அச்சு பிசகாமல்
உன்னிடம்
உளறிக்கொட்டும் என் மனது..

ஒன்றை மட்டும் சொல்லாமலேயே
தனக்குள் வைதுக்கொல்கின்றது..!!

இத்தனை உளறல்களிலும்
நான் உன்னிடம் சொல்ல வருவதென்னவோ
அந்த ஒன்றை மட்டும் தான்..!! காதல்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (30-Jan-14, 5:41 pm)
பார்வை : 108

மேலே