திருமண நாள் வாழ்த்து

சிவனாரின் இடப்புறம் எமக்கருள
பேச்சு வார்த்தையின் முடிவில்
பேரம் படிந்தது !
தாம்பூலத் தட்டுடன்
தட்சிணைப் பணமும் கைமாற்றமாக
அக்கணம் முதல்
நீண்டு கொண்டே போனது
ஆஞ்சநேயர் வால் போல்
சீர் வரிசைப் பட்டியல் !

மஞ்சள் கயிறு அம்மாவின்
மாங்கல்யம் தாங்க
முத்திரைத் தாளில் இட்ட கையெழுத்து
பத்து வட்டிக்கு பணம் கொண்டு
சேர்த்தது தந்தையின் கையில் !
கல்லூரி சுற்றுலா கட் ஆகிப் போச்சு
கடைக்குட்டி தம்பிக்கு !
காணி நிலமும் கை மாறிப் போச்சு !
யாசகம் போல் கையந்தி
பரிசாய் வந்தன பல பொருட்களும் !

சமையல் முதல் சாந்தி வரை
அவர் சொல்லில் செயலாக்க
வார்த்தைகளுள் அகப்படாத வருத்தங்களுடன்
வாடிய தேகமும் நிறைந்த கண்ணுமாய்
எந்தையும் தாயும் என் எண்ணம் நிறைத்தில்
மாலையிட்ட அந்த நொடி
மனதில் பதிவாக மறுத்தது !

காலதேவன் சக்கரத்தில்
காட்சிகள் மறைந்தாலும்
செம்புலப் பெயல் நீர் போல்
கலந்து செழித்தாலும்
இன்புற்று வாழ்வதாய்
எம்தாய் மகிழ்ந்தாலும்
என் மனதின் ஆழத்தில் மட்டும்
ரணமாய் ரத்தக் காயங்களுடன் !
சில சமயம் புண்ணாகும்
சீழ் வைத்து வேதனிக்கும் !

இருந்தாலும் வாழ்த்துங்களேன்
எனக்கொரு திருமண நாள் வாழ்த்து !

எழுதியவர் : thilakavathy (4-Feb-14, 5:40 pm)
பார்வை : 426

மேலே