கரிசல் மண்ணில் ஒரு காவியம் 9
![](https://eluthu.com/images/loading.gif)
கரிசல் மண்ணில் ஒரு காவியம் 9
அத்தியாயம்-9
கிழவி மருத்துவ மனையில் இருந்தாலும் அவள் விதைத்த கன்னி வெடிகள் ராஜாவை கமலாவின் வீட்டை நெருங்க முடியாமல் அச்சுறுத்தியது.ஒட்ட முடியாத அளவில் அந்த இரு வீட்டின் பழக்க வழக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.கமலா ராஜாவுக்காக ஒரு பாட்டுப் பாடுவாளே அந்தப் பாட்டு ஒலி கேட்டுப் பல நாட்களாகின.
கமலாவின் பாட்டு ஒலி வெளிவரும் அந்த சன்னல் கதவுகள் மூடப்பட்டிருந்தன.முன் வாசல் கதவும்.சாத்தப்பட்டிருந்தது.கமலாவின் ஒரு மெல்லிய குரல் ஒலி கூட வீட்டைவிட்டு வெளியில் கசியவில்லை.ராஜா பித்துப்பிடித்தவன்போல் இருந்தான்.சன்னல் திறக்காதா எனக்காத்திருந்தான்.வீட்டை சுற்றி அமைதியான சூழல் நிலவியது.இந்த உலகமே சூன்யமாகிவிட்டதோ என்ற பயம் அவனுக்குள் நிறைந்திருந்தது.
அப்போதுகூட கமலாவின் நிலை என்னவோ என்பதே அவன் கவலையாக இருந்தது.அவன் கவலை சரியாகத்தான் இருந்தது.கமலாவுக்கு ஏகப்பட்ட உத்தரவுகள்.அவள் எந்த ஒரு காரணம் தேடியும் ராஜாவைப் பார்க்கவோ பேசவோ கூடாது என்பது கண்டிப்பான தடை உத்தரவு.அப்படி மீறும்போது அவள் அவளுடைய தாய்மாமன் வீட்டிற்கு அனுப்பபடுவாள் எனவும் அவளை மிரட்டி வைத்தனர்.தாய்மாமன்தான் அவளுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள மாப்பிள்ளை.அதற்காகவே அவளை பொத்திப் பொத்தி அவளுடைய ஆசைகளையும் கனவுகளையும் அர்த்தமில்லாமல் அடக்கி வைத்தனர்.இது மனித இனதிற்குச் செய்யும் அநியாயம் அக்கிரமம் பாவம் என்றுதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.
குறிப்பாக பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருப்பதுதான் வேதனையிலும் வேதனை.பெண்விடுதலை பற்றிப் பேசியும் போராடியும் வந்த பாரதியும் பெரியாரும் தோற்றார்களா வென்றார்களா நிச்சயமாகக் கூறமுடியவில்லை.ஆம் இதோ அந்த சுயமரியாதைப் பகலவன் சொன்னதை அப்படியே இங்கே துணிச்சலாகச் சொல்கிறேன்.கேளுங்கள்.” பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள். ஏனெனில், இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழுவிடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜூப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய் விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்துப் புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்லுவது பெரிதும் முட்டாள்தனமோ என்பதாகப் பொது மக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும் இந்த மார்க்கத்தைத் தவிர, அதாவது பெண்கள் பிள்ளைபெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலையில்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப்போன்ற உறுதியுடையதாயிருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்ல வரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும் போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு தன்மை நடத்தி வருகின்றபோது இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.
தவிர, 'பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது. மானிடம் வர்க்கம் விருத்தியாகாது ' என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம் ? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும் ? அல்லது இந்தத் தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாயிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இது வரையில் பெருகிக்கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.
பெண்களின் அடிமைத்தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் அந்த இடத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. பெண்களைப் பற்றியே நாம் கவலை கொண்டு சொல்லுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்கள் விடுதலைக்குப் பெண்கள் வேறு எவ்விதமான முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்வித கஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இன்பமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன்தான் பிள்ளை குட்டிக்காரனாயிருப்பதனாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது.
பெண்களின் முழுமையான விடுதலைக்கு பெண்களே தனக்குள்ள சக்தியை உணர வேண்டும்.போராடத் துணிந்து ஒன்று கூட வேண்டும்.ஒரே குரலில் தங்கள் உரிமையை மீட்டெடுக்கவேண்டும்.அப்போது அவர்கள் பாரதியையும் பெரியாரையும் தங்களுக்குள் உயிர்த் துடிப்பாக உள் வாங்கிக்கொண்டு தாமே முன்னேற வேண்டும்,
(தொடரும்)
-------------------------------------------
நாளை மறுநாள்
-----------------------------------------------
கொ.பெ..பி.அய்யா.