கிராமத்து வீடு

எனக்கு பரந்த மனம். நீங்கள் எத்தனை பேர் வந்தாலும் தாராளமாக என்னுள் ஐக்கியம் ஆகிவிடலாம்.

அப்படித்தான் பல வருஷங்களுக்கு முன் தன் கணவனுடன் புதுமணப் பெண்ணாக சிறிது வெட்கம் கலந்து என்னுள் ஐக்கியமானாள், மீனு என்கிற மீனாக்ஷி.

அந்த குடும்பத்தின் சிறிய மருமகளாய் வந்தவள், நாளடைவில் எல்லோரின் அன்பையும் சுலபமாக பெற்றுவிட்டாள்.

எனக்கு மிகவும் நெருக்கமானவள். என்னை சுத்தமாக பாதுகாப்பவள். அவள் முதல் பிரசவத்தில் இருந்து பல நல்ல சுப காரியங்களை என்னுள் நடத்தியவள். அதனால் தான் இன்று வரை என்னுடனேயே இருப்பவள்.

அந்த குடும்பத்தில் எல்லோருமே, அவளுடைய கொள்ளுப் பேரன் வரை எல்லோரும் என்னுடன் கொஞ்சி விளையாடி இருக்கிறார்கள். என் மீது அப்படி ஒரு பிரியம்.

என்னதான் வசதி வாய்ப்புகள் வந்து அவர்கள் உலகத்தில் எந்த மூளையில் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னைப் பார்க்காமல் இருந்தது கிடையாது.

வயதான காரணத்தால் என்னுடைய மீனுவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆகையால் அவளை ஒரு வசதியான மருத்துவமனையில் சேர்த்து சிறந்த மருத்துவர்களின் பார்வையில் அவளுக்கு சிகிச்சை அளிக்க அவளது குழைந்தைகள் துடித்தனர்.

ஆனால் என் மீனுவோ என்னை விட்டு ஒரு கண நேரமும் பிரிய மறுத்து விட்டாள்.

அவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் பிறகு வேறு வழி இல்லாமல் அவர்களில் ஒவ்வொருவராக இருந்து கொண்டு அவளை பார்த்துக் கொண்டனர்.

ஒரு புறம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் துக்கமாக இருந்தது. நானும் மீனுவிடம் சொன்னேன் என்னைப் பற்றி கவலைப் படாதே, எனக்கு நீதான் முக்கியம், போ என்று, தான் எடுத்த முடிவில் பிடிவாதமாய் இருந்து விட்டாள்.

அவள் சிறிது குணமானவுடன், ஒரு பெண்ணை துணைக்கு வைத்து விட்டு அவர்கள் கிளம்பி விட்டார்கள்.

நானும் என் மீனுவும் பழைய கதைகளை பேசிக் கொண்டு இருப்போம்.

மாதங்கள் பல உருண்டோடின.

திடீரென்று என் மீனுவிற்கு ரொம்பவும் முடியாமல் போய்விட்டது. தகவல் சொல்லி எல்லோரும் வந்து அவர்களுக்குள் ஏதேதோ பேசி கடைசியில் அவளை வலுக்கட்டாயமாக என்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போக முடிவெடுத்தார்கள்.

ஆனால் அதற்குள் என் மீனுவின் உயிர் அவள் உடலில் இருந்து பிரிந்து விட்டது.

வந்தவர்கள் செய்யவேண்டிய காரியங்களை சம்பிரதாயமாக செய்து விட்டு, அவரவர்கள் சென்று விட்டனர்.

போகுமுன் என்னை பார்த்துக் கொள்ள சொல்லி அந்த தெருவில் உள்ள ஒரு பெரிய மனிதரிடம் சொல்லிவிட்டுப் போனார்கள்.

நான் இப்பொழுது அநாதையாய் நிற்கிறேன்.

என்னிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட என் மீனுவின் நினைப்பாகவே நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

வருடங்கள் பல நகர்ந்து விட்டன.

நானும் நம்பிக்கையோடு இருக்கிறேன் என் குழைந்தைகள் யாராவது வந்து என்னைப் பார்ப்பார்கள் என்று.

இதுவரை யாரும் வரவில்லை. எனக்கும் வயோதிகத்தால் உடம்பு தள்ளாடுகிறது.

நானும் அவர்களுக்கு மீனு மாதிரித்தானே. அதை ஏன் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அவர்களின் சககலங்களையும் பார்த்தவள் நான்.

சதையும் ரத்தமும் இருந்தால் தான் உணர்வு இருக்குமா.

மனுஷ ஜன்மங்களுடன் பழகியதால் உறவு, பாசம், அன்பு எல்லாவற்றிற்கும் நானும் அடிமையாகி விட்டேனே.

மீனு இருக்கும் மட்டும் தான் சொந்த பந்தம் எல்லாமா.

நானும் சிதிலம் அடைந்து விட்டேன். நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன்.

என்னை யாராவது தவறான காரியங்களுக்கு உபயோகப் படுத்த முயற்சிக்கக் கூடாது.

ஆகையால் இதை படிக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் யாராவது என் குழைந்தைகளை பார்த்தால் என் நிலைமையை அவர்களுக்கு சொல்லுங்கள்.

அது முடியவில்லை என்றால் நான் நல்லபடியாக "அவனிடம்" செல்ல வேண்டும் என்று பிரார்த்தனையாவது பண்ணுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகட்டும்.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (5-Feb-14, 11:40 am)
Tanglish : kiramaththu veedu
பார்வை : 428

மேலே