என்னவளும் எழுதுகோலும் - நினைவும் நிஜமும்

வெள்ளைமனம் கொண்ட
காகிதத்தின் கன்னத்தில்
எழுதுகோல் முத்தம்
தர தயாரான நேரம் !!

என்னவள் முறைத்தால் - என்
எழுதுகோல் மீது பொறாமை கொண்டு !

வரிக்கு உயிர் தரும்
என் எழுதுகோல்
என்னவளைப் புரிந்து

வசந்தம் தரும்
கரத்தை விட்டு - மெல்ல சரிந்து
மேசை மீது - மௌனமாய் நின்று
காதல் செய்தாள் காகிதத்தை !!

என்னவள் எனை பார்க்க
மறந்து போனேன்
நினைவில் நின்ற வரிகளை !!

அருகில் அமர்ந்தாள் - நான்
நிலைகுலைந்த நேரமது !!

ஒற்றை காலில் காதல் செய்த
எழுதுகோல் சற்று
தடுமாறிய ஓசையுடன்
என்னவளை ஏனோ முறைத்தாள் !!
எழுதுகோலை இடையுறு செய்தது
என்னவள் தான் போலும் ..!!

சன்னல் காற்று
தென்றலாய் வீச
விழி விளிம்பில்
என்னவள் இருந்தும் - அவள்
வாசம் வரவில்லை !!

இரவு இரண்டு மணி என்பதை
உடனே உள்வாங்கி
இதயம் இதமாய் சொன்னது
என்னவள் எண்ணம்
கற்பனை என்று !!

அதே நேரம் - எனை
அசைந்த காற்றில்
அழகாய் அழைத்தான்
காகித காதலன் !

நினைவை திரட்டும் நான்
நிஜத்தை நிறுத்த விரும்பவில்லை !

இணைத்து வைத்தேன்
உணர்விற்கு உயிர் தரும்
இருவரையும் - காத்திருந்த
காகிதத்துடன் என் உயிர்
எழுதுகோலை !

கவிதை வரிகளில்
காதல் செய்யும்
காகித காதலனை
என் உயிரான
தேன்மொழி தமிழால்
முத்தம் தந்து
வரிகளில் வாழ்கிறாள்
எழுதுகோல் காதலி !

இவள் இதழ் பதித்த
காகித காதலனின்
கன்னம் தான்
கவிதையாய் இங்கு !!

விடை பெறுகிறாள்
விரலிடை சினேகிதி !!

பிரிவின் பிடியில்
என் இதய வலியை
உடனே உணர்ந்தான்
காகித காதலன் !!!

என்னவளும் எழுதுகோலும்
நினைவும் நிஜமும் !!

-------------------------------------------------------------------------
கவி
தாங்கும்
தாளுக்கும்
எழுதுகோலுக்கும்
என் சமர்ப்பணம்
------------------------------------------------------------------------

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (6-Feb-14, 12:57 am)
பார்வை : 805

மேலே