நட்பும் – உறவும்
இவை இரெண்டும் மனித வாழ்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இவை இரண்டிற்கும் சிறு வாக்குவாதம். இரெண்டும் என்னிடம் வந்து தங்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்றனர்.
உங்களின் பலத்தையும் பலவீனத்தையும் நீங்களே சொல்லுங்கள், பிறகு முடிவுக்கு வரலாம், என்றேன்.
உறவு : பூமியில் ஓர் உயிர் ஜனித்தவுடனேயே,
கூடவே நானும் அதனுடனே சேர்ந்து
பிறக்கிறேன். இவ்வுலகை விட்டு உயிர்
போனாலும், நான் மட்டும் நிலைத்து
நிற்கிறேன், அதன் தலைமுறைகள்
நிலைக்கும் வரை.
நட்பு : என் நிலையும் அதுதான். ஆனால்
என்னைப்பற்றி தெரிந்துகொள்ள
சில/பல வருடங்கள் ஆகின்றன.
எல்லோருக்கும் தெரியும்படி உன்னை
வைத்த இறைவன், தக்க சமயத்தில்
என்னை உலகிற்கு அறிமுகபடுதுகின்றான்.
அதன் பிறகு நானும் பல ஆண்டுகள்
எல்லோர் நினைவிலும் நிலைத்து
நிற்கிறேன்.
உறவு : குடும்பம் என்றால் அதில் நான்தான்
நாயகன்/நாயகி, தெரிந்துகொள்.
நட்பு : பல குடும்பங்களில், உன்னை அறியாமல்,
எனக்கும் சிறப்பு அந்தஸ்து குடுத்து,
அவர்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்டு
உள்ளனர். இது எனக்கு கிடைத்த கெளரவம்.
உறவு : உறவின் மகிமை உனக்கு தெரியாது.
நட்பு : நட்பின் அருமை உனக்கு புரியாது
உறவு : எனக்கு தெரியாமல் அப்படி உன்னிடம்
என்ன பெரிதாக இருக்கிறது ?
நட்பு : உன்னிடம் சொல்ல முடியாத பல
விஷயங்களை, என்னிடம் சரளமாக,
தயக்கமின்றி பகிர்ந்து கொள்வார்கள். இதன்
மகத்துவம் உனக்கு புரியாது.
உறவு : வீட்டில் சுபகாரியம் என்றால் நான்தான்
அங்கு கலைகட்டுவேன். அங்கு
மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. என்னுள்
இருக்கும் பல கிளைகள் அங்கு படரும்.
இதுவரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காமல்
இருந்தவர்கள், பரஸ்பரம்
பரிமாரிகொள்வார்கள். அங்கு எப்படி ?
நட்பு : ஹா... ஹா... நீ சொல்லும் அதே
சுபகாரியங்களில் என் பங்கை பற்றி
முழுவதுமாக தெரிந்து வைத்துக்கொண்டு, நீ
இப்படி கேட்பது வேடிக்கைதான்.
உறவு : சொந்த பந்தங்கள் மட்டுமே கலந்து
கொள்கிற சில சுபகாரியங்கள்
உண்டு. அதில் உன் பங்கு என்ன?
நட்பு : நன்றாக தேடிப்பார், அந்த கூட்டத்தில்
ஏதாவது ஒரு வகையில் நான்
உலாவிக்கொண்டு இருப்பேன், யாராவது
என்னை அழைத்து இருப்பார்கள்.
உறவு : என் வேதனை உனக்கு தெரியுமா ?
நட்பு : அதை மறைக்கத்தான் மருந்தாக நான்
இருக்கிறேனே.
உறவு : நண்பர்களாக ஆரம்பித்து, பிறகு
காதலர்களாக பரஸ்பரம் நெருங்கி, உறவு
எனும் என்னுள் விழுந்து விடுகிறார்களே.
இதன்படி பார்த்தால் நீயே என்னுள்
அடக்கம்.
நட்பு : எல்லோரும் அப்படி இல்லை. அப்படி
இருப்பவர்கள் என்னை கொச்சைப்
படுத்துகிறார்கள் என்று தான் அர்த்தம்.
எனக்கு என்று புனிதத்தன்மை இருக்கிறது. நீ
சொல்பவர்கள் தங்களின் இலக்கை அடைய
என்னை ஒரு கேடயமாக
பயன்படுத்துகிறார்கள். இது
அவர்களுக்குதான் கேவலம்.
உறவு : சொந்தபந்தம் எப்பொழுதும் விட்டுபோகாது.
நட்பு : போகாத மட்டும் நன்மைதான்.
சொல்வதற்கே கஷ்டமாக இருக்கிறது
உறவில் விரிசல் வந்தால் மீண்டும்
இணைவது மிக மிக கடினம்.
உறவு : அதையும் மீறி நான் துளிர்விடுகிறேனே.
நட்பு : இருக்கலாம். அதில் பழைய
அன்யோன்னத்தை பார்க்க முடியாது.
உதட்டளவில் இருக்கும் அன்பு, பாசம்,
உள்ளத்தில் இருக்கவே இருக்காது .
உறவு : நான் இருப்பதால் தானே உன்னை பலர்
அடையாளம் காண்கிறார்கள். இதை
கொஞ்சமாவது சிந்தித்துப் பார்த்தாயா?
நட்பு : அப்படியே வைத்துகொள்வோம். என்னை
பலர் அடையாளம் காண்கிறார்கள் என்றால்
நானும் உனக்கு நிகராக
ஜொலிப்பதால்தானே. எனக்குள் இருக்கும்
சக்தியை இது உலகுக்கும் உனக்கும்
காட்டுகிறது என்று அர்த்தம்.
உறவு : எங்கு சென்றாலும் ஒருவர் தன்னை
அறிமுகம் செய்யும் பொழுது இன்னார்
மகன்/மகள் என்று தான் சொல்கிறார்களே
தவிர, உன் பெயரை யாரும் தப்பித்தவறி
கூட சொல்வதில்லையே.
நட்பு : என்னை பற்றி அரைகுறையாக
கேள்விப்பட்டு வார்த்தைகளை விடாதே.
"உன் நண்பனைப்பற்றி சொல்,
உன்னைப்பற்றி நான் சொல்கிறேன்" என்ற
வாசகம் உனக்கு தெரிய வாய்ப்பில்லை.
இன்றும், என்றும் இது தான் உலகில் வாழும்
அனைவரும் எனக்கு கொடுத்த வரம் என்று
நான் சொல்லுவேன்.
உறவு : நம்முடைய வாக்குவாதம்
தொடர்ந்துகொண்டே இருக்கும். அது ஒரு
புறம் இருக்கட்டும்.
நட்பு : ஆமாம்... ஆமாம்.
பிறகு இவை இரண்டும் என்னை பார்த்து என்னிடம் எதையோ எதிர்பார்த்து, ஒன்றுக்கொன்று விஷமமாக சிரித்துக்கொண்டு இப்பொழுது நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள், என்றன.
இவை இரண்டும் இல்லாமல் நான் இல்லை என்பதை நன்றாக தெரிந்துகொண்டு, என் பதிலை எதிர்பார்த்து நின்றன.
உறவை மதிப்பவன் நான். சொந்தத்திற்குள் பகைமை வரும்பொழுது உறவு ஸ்தம்பித்து நிற்கிறது. அந்த தருணத்தில் ஒரு சிக்கலான இறுக்கம் மெல்ல மெல்ல எழுகிறபோழுது, சொந்தமோ, உறவோ, செய்வதறியாது வாய் மூடி, கை கட்டி வேடிக்கை பார்கத்தான் முடிகிறதே தவிரே, அந்த கசப்பான சூழ்நிலை மறுபடியும் சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சி எடுத்தாலும் தோற்றுத்தான் போகிறது.
அந்த இடத்தில் நட்பு வந்து பாலமாக நின்றாலும், அதுவும் அடிபட்டு போகிறது.
உறவு என்றாலே அது பலவித பரிமாணங்களை கொண்டது. நட்புக்கு அப்படி எதுவும் இல்லை.
நட்பிலே பகைமை வந்தால், அந்த நட்பே கேள்விக்குறியாகிறது.
உறவிலே பகைமை வந்தால், உறவே அர்த்தமற்றதாகிறது, அது ரத்தபந்தமாக இருந்தாலும் கூட.
பக்கத்திலேயே இருந்தாலும் மனகசப்பினால் ஒருவருக்கொருவர் பேச முடியாத சூழ்நிலை உருவாகிறது - உறவிலே.
அதுவே, நட்பில் அதிகம் பேசாமலும், அடிக்கடி சந்திக்காமலும், வெகு தொலைவில் இருந்தாலும், நட்பு நட்பாகவே இருக்கிறது.
ஆகவே, என்னை பொறுத்தவரை உறவை விட நட்பு ஒரு சில சதவிகிதம் மேலோங்கி நிற்கிறது.
குறிப்பு - விதிவிலக்குகள் என்பது எங்கும், எதிலும் இருப்பவைதான்