நிறைவாக வாழ்
தாயின் கரம் பிடித்து, நடக்க பயின்றாய்,
தந்தையின் தோளேறி, உலகை ரசித்தாய்.
ஆசானின் அடி பற்றி, அறிவை பெற்றாய்,
அனுபவத்தின் துணையோடு, அலுவல் புரிந்தாய்.
ஆசையின் மிகுதியால், ஆஸ்தியை சேர்த்தாய்,
அவசர புத்தியால், அமைதியை இழந்தாய்.
ஆரூடம் பார்க்க, அலைந்து திரிகிறாய்,
ஆண்டவனை தேடி, ஆலயம் செல்கிறாய்.
அலுப்பின் மிகுதியால், அன்பை மறக்கிறாய்,
அரிய உறவுகளின், வெறுப்பை பெறுகிறாய்.
சிந்தை கலங்கி, சினம் கொள்கிறாய்,
தான் என்ற எண்ணத்தால்,தலைக்கனம் கொள்கிறாய்.
தன்னலம் கருதி, தனிமை அடைகிறாய்.
தள்ளாத வயதில், தவறை உணர்கிறாய்.
தலை சாய்த்து அழ, தோளொன்று தேடுகிறாய்,
நலமாக வாழ, நல்வழி யாதெனில்
குறைவாக பெற்று, நிறைவாக வாழ்.