முகமூடி
முகமூடிகளற்ற முகங்களை
எங்கினும் பார்க்கமுடிவதில்லை !
தனித்திருக்கையில் கூட
கூத்து மேடையின்
முகமூடி தயாரிப்பு குறித்த
முனைப்புடனேயே இருக்கிறது !
வளைவு , நெளிவு
குழைவென நவரசமினுங்கும்
முகமூடிகளை அணிந்தணிந்து
அலுத்துப்போனதால்
கழட்டிப்போட்ட நிஜமுகம்
நினைவில் வந்தது !
என்றோ நிஜமுகம்
கழட்டிப்போட்ட
பழம்பொருட் களடங்கிய
இருட்டறையின்
மங்கிய வெளிச்சத்தில்
குவிந்திருந்த முகமூடிகளையகற்ற -
கொடும் நாற்றத்திற்கிடையில்
அசலடையாலம் சிதைந்து
அடியில் பரிதாபமாகக் கிடந்தது
எனது நிஜமுகம் !
எடுத்து ஆசையுடனணிந்து
நிலைக்கண்ணாடியில் பார்க்கையில்
என் முகமே எனக்கானதாயில்லாமல்
பொருத்தமற்றிருந்தது -
பார்ததவர்கள் அனைவரும்
அடையாளம் காணத்தவறி
யாரோவென பரிகாசம் செய்தனர் -
எவ்வளவோ எடுத்துரைத்தும்
நிஜமுணர மறுத்தனர் !
மனமின்றி மறுபடியும்
நிஜமுகம் கழட்டி
குப்பையறை எறிந்து
வெளியேறினேன் !
தேவையற்ற பெருங்குப்பைகளோடு
எதிர்பட்டாள் கந்தலாடையுடன்
நிஜமுகம் பொருத்திய
பைத்தியக்காரியொருத்தி -
எந்த முகமூடிகளுமற்றிருந்தது
அவளின் குப்பைகள் .