===+++கவிஞனுக்கேதடா மரணம்+++===

வார்த்தை வசியங்கள் செய்திடலாம்
வலியை கவிதை யாக்கிடலாம்
எழுது கோலை உளியாக்கி
மடமை மலையை தகர்த்திடலாம்...

உலகை எழுத்தில் அடக்கிடலாம்
உணர்வை உயிராய் விதைத்திடலாம்
விடுதலை நெருப்பை வளர்த்திடலாம்
விழிகளின் இருளை விலக்கிடலாம்...

உழைப்பின் உயர்வை காட்டிடலாம்
உறுதியை மனதில் பயிரிடலாம்
விரிமலர் வெளியிடும் முதல்வாசம்
விரும்பிடும் தும்பியாய் மாறிடலாம்...

புதுமை வழியை புகுத்திடலாம்
புரட்ச்சிப் பாதை அமைத்திடலாம்
புட்கள் மீட்டும் சிம்பொலியடுத்து
எட்டியை இனிக்கச் செய்திடலாம்...

எட்டுத் திக்கும் கடந்திடலாம்
ஏழாம் அறிவை உணர்ந்திடலாம்
எந்த அந்நிய கவிஞனையும்
யாப்பு கொண்டே வென்றிடலாம்...

முற்றும் கற்று தேர்ந்திடலாம்
மூன்றாம் கண்ணை திறந்திடலாம்
குழந்தை பேசும் குறுஞ்சொல்லால்
குறிஞ்சி மொட்டை அவிழ்த்திடலாம்...

சுற்றும் புவியாய் இருந்திடலாம்
சுதந்திர காற்றாய் வீசிடலாம்
சிறுபுல் வெண்பனி துயில்களைக்கும் - செங்
கதிரவ விரலாய் பிறந்திடலாம்...

அரச நெறியை பரைத்திடலாம்
ஆட்சி மாற்றம் நிகழ்த்திடலாம்
புத்திக் கத்தியை கூராக்கி
புதிய உலகம் சமைத்திடலாம்...

காலம் கடந்தும் நிலைத்திடலாம்
ஏட்டிலும் பாட்டிலும் உலவிடலாம்
ஏக நிலையை அடைந்திடலாம்
எல்லோர் உளத்திலும் உயிர்த்தெழலாம்...

கவிஞனுக்கேதடா மரணம் - அவன்
கவிதைக்கேதடா மரணம்!
ஒவ்வொரு விழிகளுக்குள்ளும் - அவன்
கவிதைகள் ஜனித்தே தீரும்...!!!

------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (10-Feb-14, 4:19 pm)
பார்வை : 135

மேலே