நான் வாங்கிய திட்டு..!!! (என் நண்பனிடம் இருந்து)

நீலன்ப்ருக்ருத்யன்,
கவிதாலோகம்,
24/6/1995.
என் தமிழ்ராசனுக்கு,

இதுவரை நான் உனக்கு -
எழுதிடத்தான் அவசியமில்லாமல் இருந்தது.
ஏனனில் -
கடிதம் எனபது "தூரங்களின் பாலம்"
- இப்படித்தான் எண்ணியிருந்தேன் நான்..!

இப்பொழுதும் நான் காகிதத்தை நனைப்பது
உன் பொருட்டல்ல..
எழுத்துலக நலம் பொருட்டு..!

இது ஒரு நண்பனுக்கு - ஒரு
நலம் விரும்பி எழுதுவதல்ல..!

ஒரு கலைஞனுக்கு - ரசிகக்கடலில்
ஒரு துளி எழுதுவது..!!

கவிராசா..,
உன் கவிக்கோர்வையின் தீரத்தில்
என் மனச்சிலிர்ப்பை..
எங்ஙனம் உரைப்பேன்..?

உன் காகிதம் நனைந்ததால்
என கண் நனைந்ததை
என் சொல்வேன்.?

உன் எழுத்துச் சங்கிலியில்
என் இதயம் சிக்கிக் கொண்டு தவிப்பதை,
உனக்கு புரியவைப்பது எப்படி..??

படிமங்கள் -
உன் பொருட்டே பிறந்தனவா என்ன ?
புதுக்கவி தாயின் கேசத்தை
வகிடெடுத்து சீவ பிறந்தவனோ நீ?

கவிப்பிரியா..
தமிழ்ப் பெண்ணை
உன் கைக்குள் போட்டுக்கொண்ட
ரகசியம் தான் என்ன..?

என் காதிற்கு மட்டும்
சொல்வாயா ?

எனினும் --
உன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி..
என் இதயத்துள்
ஒன்று மிச்சம் இருக்கிறது..!!!!

ஏன் தமிழா..,
""மௌனமும், காதலும்,
அன்பும், நட்பையுமே
இன்னும் எத்தனை காலம் தான்
கவி உலகம் பிரசவிக்க வேண்டும்..?""

எங்கு ஒளிந்து கொண்டன..
உன் புரட்ச்சி வித்துக்கள்..?

புரட்ச்சிப் பாக்கள் என்பன
"சுப்புரத்தினத்தின்" பாட்டன் வீட்டு சொத்தா?

எட்டயபுரக் கவிஞன் வீட்டு
கொல்லையில் பூத்த மலரா "நாட்டுப்பற்று"?

சுப்பு ரத்தினத்தின் ஆசான் கிளப்பிய
முரசு ஒலி உனக்கு கேட்கவில்லையா ?

தாரைகள், தம்பட்டங்கள் முழங்க வைக்க
உன் எழுத்துக்கரங்களால் முடியாதா என்ன?

மென் உணர்வுகளை -
இதய நிலத்தில் விதைக்க தெரிந்தவனே..
அன்புக் கண்ணீரை - கன நேரத்தில்
அறுவடை செய்ய அறிந்தவனே..
நீ நினைத்தால்
அதே இதயங்களில்
அக்னி விதைகளை விதைக்க
முடியாதா என்ன..?

இருபத்தொன்பதில்
புரட்சி வெடிகளை
தமிழுக்குள் வைத்து மறைத்த
பட்டுக்கோட்டை
உன் அண்டை வீட்டுக்காரன் அல்லவா..?

எழு இளைஞ்சனே - உனக்காய்..
தலைமுறை ஒன்று காத்திருக்கிறது...!

எழுதியவர் : raji (11-Feb-11, 8:35 pm)
சேர்த்தது : npsrajan
பார்வை : 619

மேலே