கனவு புகட்டிய பாடம்

தூக்கம்..!

உடலின்
தற்காலிக மரணம்.
மூளையின்
தற்காலிக சுதந்திரம்.

நம் உடலை
மரணிக்கவைத்து
மூளை எழுதும்
மகாகாவியமே கனவுகள்..!

நேற்றிரவு என்னை
மரணிக்க ஊதியது
கொட்டாவி சங்கு..!

என்னுடல் மரணித்தது
எனதுமூளை என்னிடமிருந்து
விடுதலை அடைந்து
விடைதேடி அலைபாய்ந்தது


எனது மூளை
கனவு காட்டில்
ஆடிய ஆட்டத்தை..!
இதோ ...!
காட்சிப்படுத்துகிறேன்



மிக நீண்டதொரு தாள்
இந்த பிரபஞ்சத்தின்
அளவை மிஞ்சியிருக்கும்.

ஒரு அழகான எழுதுகோல்
அந்த பாரதியின்
மீசையின் பாதியளவு இருக்கும்.

அந்த சூரியனிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
அக்னி மையும்.
அந்த நிலவிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
குளிர் மையும்.
எழுதுகோலின் உடலுக்குள்
ஊற்றி மூடியிருக்கும்.

எழுதும் தாளின்
தலைப்பு தேடியே
தலை வெடித்தது
எப்படி இறுதிவரை
எழுத முடியுமோ..?

என் மூளை குழம்பிய
மூன்றாவது நிமிடம்
தமிழ் அன்னை
வானத்திரையில் காட்சியளித்தாள்..!

தமிழ் அன்னையை
வணங்கிய மூளை
உளர ஆரம்பித்தது...!

தாயே.......!
அமுதே...!
உனை எப்படி போற்றுவேன்?
எதை சொல்லி எழுதுவேன்?
வள்ளுவனின் குறள்களும்
நினைவில் இல்லை
பாரதியின் பாடல்களும்
நினைவில் இல்லை.
கம்பனின் கட்டுத்தறியும்
என்னிடமில்லை

மொழியறிவும் எனக்கில்லை
இலக்கணமும் தெரியவில்லை
இலக்கியமும் படித்ததில்லை
என்செய்வேன் தாயே... ?
என் தமிழ்தாயே...!

ஐய்யகோ...! தமிழனா நான்..?
தமிழறிவு முழுவதுமாய் இல்லையே..!
நானா தமிழன்...........?
பிழையின்றி கவியெழுத தெரியவில்லையே..!
நானா தமிழன்............?

தாயே ..............!
என்னை மன்னித்துவிடு!
இந்த நொடியிலே
எனை கொன்றுவிடு !

அழகாய் புன்னகைத்த
தமிழ் அன்னை.

தமிழனே.........!
கற்றுகொள்ளும் ஆர்வமிருக்க
கத்திக்கொண்டு ஆர்ப்பரிக்கிறாயே
ஏனடா மகனே... ? என்னாயிற்று?
பொறுமை ! பொறுமை !!
ஆவேசப்படாதே......!

வரமென்ன வேண்டும்
கேள்..! அருளுகிறேன் “

உனைப்போற்றி எழுதிட
உனை வான் அளவு
புகழ்ந்து எழுதிட
ஒரளவாயிருக்கும்
என் மொழியறிவு
மலையளவு
வளர்ந்திடவேண்டும்
வரம் தருவாயா ? தாயே !
என் தமிழ் தாயே..!

மீண்டும் புன்னகை பூத்தாள்
என் இனிய தமிழ் அன்னை.

”தமிழனே....!
மகனே...!

இலக்கணம் கற்று
இலக்கணம் எழுது
இலக்கியம் படி..!
இலக்கியம் படை..!

பிறமொழியின் தூசியை
என்விழியில் தூவாதே..!

புலமை பெற்று
புது கவிதை எழுதினாலும்
மரபு கவிதையை மறவாதே..!

இதனை பின்பற்று !
என் வரம்
பின்பு வரும்.

மீண்டும் சந்திப்போம்!..”

மெலிதாய் புன்னகைத்தே
மெதுவாய் தன்னை
மறைத்துகொண்டாள்
தமிழ் அன்னை.!


பிரபஞ்சத்தை மிஞ்சிய
நீண்ட தாளையும்
பாரதியின் மீசையளவு
எழுதுகோலையும்
பத்திரப்படுத்திய மூளை..

என்னுடலை
தட்டியெழுப்பியது
கனவு கலைந்தது
என்னுள் ஏதோ
புதியதாய் ஒரு தெளிவு..!

உயிரெழுத்து
மெய்யெழுத்து
உயிர்மெய்யெழுத்து
ஆயுத எழுத்து
மீண்டும் படித்து
எழுதிட எழுதுகோலை
தேட கட்டளையிட்டது
கனவு கண்ட என் மூளை...!


--------------------இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (18-Feb-14, 1:29 am)
பார்வை : 666

மேலே