நினைத்ததுண்டா

அடைமழையில் சுகமாக உறங்குவார்;
நானோ கழனியில் கண் இமைக்காமல்..
பயிர்கள் மூழ்கியது என் கண்நீரில்தானோ ?

நிவாரண பணம் வாங்க ஓடினேன்..
பள்ளிக்கு பணம் செலுத்த அன்று தானே கடைசி நாள் !

விதைக்கு அலைந்தேன்..
தண்ணீருக்கு கொடி பிடித்தேன்..
மின்சாரத்திற்கும் மண்டி இட்டேன்...
இருந்தும் என்ன...

பயிர் வளர்ந்தும் பயனில்லை;
அரை மூட்டை அறுவடைக்கு ஆளில்லை;
கல்லூரிக்கு செல்லும் கால்கள் கழனியில்.

கொள்முதலில் கிடைத்த காசு
கடனுக்கும் கஞ்சிக்குமே கரைந்து விட்டால்...
அடுத்த அறுவடைக்கு ?

கல் நெஞ்ச காரன் நான்...
ஊருக்கு உணவளிக்க
என்னவளின் தாலியை அல்லவா அடகு வைக்கிறேன்..

ஆனது ஆகட்டும் அனுபவித்த ஆஸ்தி போகட்டும்
என்றெண்ணி..
விற்றேன்..
பத்திரத்தில் கைநாட்டை பதித்தேன்
என் மகன் கையெழுத்திடுவதற்காக!

இம்முறையும் மழைதான்
நில்லாமல் ஓடினேன் நிலத்தை தேடி
மூழ்க பயிரில்லை..
வலிமையான சுவர்களுக்குள்
விறுவிறுப்பாக செயல்பட்டது
மென்பொருள்..

விற்க பொருள் தேடுகிறேன்...
வெறும் கையைத்தான் பார்க்கிறேன்,,,
ஆயினும் தேற்றி கொள்கிறேன்...

மதிப்பு இருக்கிறது...
என் ஆள்காட்டி விரலுக்கு மட்டும்.
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை
மையிடும் போது.

எழுதியவர் : SABARISRI (14-Feb-11, 11:04 am)
சேர்த்தது : nsabarisri6
பார்வை : 438

மேலே