ஒரு பூவும் சூரியனும்

மலர்:
எட்ட நிற்பதேன் என்
மன்னவனே!
கிட்ட வா மெல்ல-
நானுனக்கு
மொட்டவிழ்த்துக்
காட்டுகிறேன்.
கொட்ட விழித்தபடி
எத்தனை நாள்தான் என்னை
ஒட்டாமல் ரசித்திருப்பாய்…?
சூரியன்:
எட்டத்திலும் சுகமுண்டு
என்னவளே.
கிட்டவந்து தொட்டுவிட்டால்
பட்டழகே போயிடுவாய்
பட்டவளாய் ஆகிடுவாய்.
பாசக்காரி வாசமுன்னை
பசுமமாக்க விளையேனோ?
கொன்று உன்னை ரசித்திடவா
கொட்டக் கொட்ட விழித்திருந்தேன்…?
மலர்:
பூத்துதிரும் தேகமிது
போக்கிடமோ அறியிலது
வாடிவிடும் வாசமிது
வாலிபத்தின் சுவாச மது.
தேனிருக்கும் தேகமென்றால்
தேடிவந்து மொண்டுகொள்வார்
தீண்டியவன் மீண்டு சென்றால்
காய்ந்தால் என்ன? கரிந்தால் என்ன?
மன்னவனே! என்னவனே!
மனம் வெந்தே வேண்டுகின்றேன்,
கண நேரம் தீண்டுகையே,
கவலையின்றி காயுவனே.
சூரியன்:
மணம் கொண்ட மனத்தவளே,
மங்களப்பூ குணத்தவளே…!
தளிர்க்கரத்தில் ஏந்தி உன்னைத்
தாலாட்டு பாடிடவே
வெயிற் கரத்தால் வருடுகிறேன்
வேறு என்ன செய்திடுவேன்?

உதிர்ந்து நீயும் போயிவிட்டால்
உயிர்விட்டுப் போகிடுமோ?
உறவில்லை ஆகிடுமோ?
உருக்குலைந்து போய்விடினும்
உடல் நலிந்து காய்ந்திடினும்
உயிர்கொண்டு வாழ்ந்திடுவாய்
கருவினிலே, கனியினிலே.

பெண்மை உந்தன் தேகமன்றோ?
பெற்ற பெரும் யோகமன்றோ?
எப்பிறப்பும் எழுபிறப்பும்
உன்மடியில் உய்த்திருக்கும்
ஒருமுகத்தில் உன் முகத்தை
ஆரத்தழுவி ஆண்டுகொள்வேன்
எட்ட நின்று வாழ்ந்துகொள்வேன்.

உரசிக்கொண்டே வாழ்வதுதான்
உண்மைக்காதல் என்றோ கொண்டோய்?
உயிருக்குள் வைத்துக்கொண்டு
உருகிக்கொண்டே வாழ்ந்திருப்பேன்.

எப்படி நாம் வாழ்ந்திடினும்
எதிர் புதிராய்த் தோன்றிடினும்
என்னுயிர் நீ என்னவளே,
என்னுயிர் நீ என்னவளே…!

எழுதியவர் : ஆன்றிலின் (22-Feb-14, 3:13 pm)
பார்வை : 107

மேலே