யாதும் நானறியேன்

வெட்ட வெட்ட
வளர்கிறது -அதனைத்
தூக்கியெறியும் நான் தளர்வதன்
பொருள் யாதோ
நகமறியேன் ;
எண் சாண் கூட்டுக்குள்
முடங்கிக் கொள்ளுமா உயிர் ,
விழிப்புணர்ச்சியில்
ஐம்பொறிகளின் பாவைக்கூத்து
முடமாகப் புத்தியறியேன் ;
ஊரெல்லாம் உலகெல்லாம்
ஓடிச்சென்று திரும்புகிறது
ஆசை வாய்த்த மனம் ,
அதன் வழித்தடங்கள் யாதோ
கனவறியேன்
மீண்டும் மீண்டும்
புரட்டுகிறது வாழ்க்கை
இன்னும் எத்தனை பக்கங்களோ ?!
விடைகிடைக்கா வினாவிற்குள்
மரணமறியேன் ;
இடையில் வலியது
ஊழ்வினைகளாம்
அக்கணக்கு வழக்குகளின்
நிலுவைகள் எவையோ
இன்னமும் விதியறியேன் ;
வளர்ப்பதெல்லாம்
உணவெனில்
உறவுகளின் பங்கு ஊட்டுவதே
இக்காரணங்களில்
பற்றுதலேது அன்பறியேன் ;
தோல்விகளும் வெற்றிகளும்
தண்டவாளத்தில் நடைபயின்றால்
எதனை ஊன்றி
இப்பிறவி கடப்பேன்
இன்னமும் பிறப்பறியேன் ;
பிழைத்திருத்தங்களுக்காய்
மீண்டும் நுழைகிறேன்
அனுபவ அறைக்குள் ,
நம்பிக்கை வெம்பிவிடில்
துணையாரோ யாருமறியேன் ;
வருவது நாட்கள்
தொடர்வது களைப்புகள்
பிழைப்பதெல்லாம் நிஜங்கள்
தூக்கங்கள் அண்டாத
இத்துணிவையும் நானறியேன் .....!