நிறமென்ன பாவம்
நிறமென்ன பாவம்?
கருப்பா வெள்ளையா நிறத்தில் என்ன
இருக்கும் இரகசியம் பெண்ணே!
வெறுக்கும் விதத்தில் நிறம்மென்ன பாவம்?
விருப்பும் எதனில் விளைந்தது கண்ணே?
உழைக்கவும் ஓயவும் பகலும் இரவும்
ஒன்றில் ஒன்று நன்மையே இருக்கும்.
அழகு என்பதும் நிறத்தில் இல்லை
அதனதன் செயலில் தானது விளங்கும்.
தோலில் என்ன பேதம் சொல்லும்.?
தோன்றுவ தென்ன வாதம் செல்லும்?
ஈர்ப்பு என்பதும் நிறத்தில் இல்லை.
இயல்பின் அருமை என்பதில் துலங்கும்..
கண்ணில் காணும் கருப்பு வெள்ளை
எண்ணில் தோணும் இரண்டும் நன்மை.
ஒளியும் என்பதும் நிறத்தில் இல்லை.
விழியன் பெருமை விதத்தில் இலங்கும்.
நிறங்களின் காட்சி ஒளியின் மாட்சி.
விரைவின் நீட்சி நிறைவின் சாட்சி.
அறிவு என்பதும் நிறத்தில் அல்ல
செறிவின் திறமாய் சீரில் முழங்கும்.
இயற்கை செய்யும் மாயம் எல்லாம்
ஏதோ ஒன்றில் நியாயம் கொள்ளும்.
இனிமை என்பதும் நிறத்தில் இல்லை.
இதயம் பழகும் இதத்தில் புழங்கும்.
கொ.பெ.பி.அய்யா.
குறிப்பு:--அன்பர்களே!
“கரிசல் மண்ணில் ஒரு காவியம்”
அத்தியாயம்—12(179908)
வெளியாகியுள்ளது.படித்துத்தான் சொல்லுங்களேன்!