என் தமிழ் வாழ்த்து==ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கு

அமிழ்தினு மினிய தமிழ்மொழி கவிதை
==அழகுற புனைந்திடு மன்பன். உங்கள்
தமிழ்மொழிப் புலமை தனித்துவ முடைத்திட
==தரணியில் பிறக்கணு மினியொரு கொம்பன்

மரபெனும் செக்குகள் மாத்திர மிழுத்து
==மாய்ந்தவர் தனைவிடு வித்து, இன்று
வரம்புகள் மீறிய கவிதா வரிகளும்
==வளர்த்திட வழிவகை காட்டிய முத்து.

வானம் தாண்டிய கவிதைச் சிறகினை ==வனப்புடன் விரித்த பறவை. எங்கள்
ஏனம் முழுவதும் உவமைத் தேன்துளி
==இனிக்கத் தந்தாய் நீஉன் சிறகை.

எண்பது வருஷம் எங்களோ டிருப்பது
==என்பது எங்களின் பெருமை. இந்த
என்பதில் எழுபது பனுவல் படைத்தது
==என்பது அல்லவா இலக்கியப் புதுமை.

ஆண்டுக ளாயிரம் கடந்தும் செழித்திடும்
==ஐயா உங்களின் படைப்பாய் நீங்களும்
நீண்டு நிலைத்திட நிலவாய் ஜொலித்திட
==நெஞ்சினில் பூத்திடு மென்தமிழ் வாழ்த்து!

***மெய்யன் நடராஜ் (இலங்கை)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Feb-14, 2:50 am)
பார்வை : 166

மேலே