நெடிலடி
ஐந்து சீர்களால் அமைந்த அடி 'நெடிலடி' எனப்படும். இயல்பான நான்கு சீர் உள்ள அளவடியுடன் ஓர் சீர் மிகுந்து வருவது நெடிலடி ஆகும். சீர் எண்ணிக் கையைக் கருதி 'ஐந்து சீர் நெடிலடி' எனப்படுகிறது.
இக்கட்டளைக் கலித்துறைச் செய்யுளில் உள்ள நான்கு அடிகளும் ஐந்து சீர்கள் உள்ள நெடிலடி களாகும்.
வென்றான் வினையின் தொகைநீங்க விரிந்து
= தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் னொளியாது முற்றும்
சென்றான் திகழும் சுடர்சூழ் ஒளிமூர்த் தியாகி
நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்.
இதன் முதலடியை மட்டும் கொண்டு, ஐந்து சீர்களைக் கொண்ட இயற்சீர் வெண்தளை, இயற்சீர் வெண்தளை, கலித்தளை, நேரொன்றாசிரியத்தளை என்று நான்கு தளைகள் அமைகின்றன. எனவே, நான்கு தளைகளால் அமைவது நெடிலடி எனப்படும். யாப்பிலக்கணமும் ’நால்தளை நெடிலடி’ எனக் குறிக்கிறது.
வெண்தளை, ஆசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை என்ற நான்கு வகைத் தளைகளில் ஒன்றான கலித்தளை அருவிநீர் கலிப்பது போல ஓசை துள்ளி நடக்கும். பண்டைத் தமிழ்ப் பாடல்களில் ஒன்றான கலிப்பாவில் கலித்தளை மிகுதியாகப் பயின்று வரும்.
கலித்தளை ஏந்திசைத் துள்ளல், அகவல் துள்ளல் என இரு வகைப்படும்.
ஏந்திசைத் துள்ளல்:
முருகவிழ்/தா மரை/மலர்/மேன் முடி/யிமை/யோர் புடை/வர/வே
வரு/சினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்
இரு/வினைபோய் விழமுனியா வெதிரியகா தியையரியா
நிரு/மலரா யறிவினராய் நிலவுவர்சோ தியினிடையே
வாய்பாடு:
நிரை நிரை – கருவிளம்,
நிரை நிரை நேர் – கருவிளங்காய்
இந்தப் பாடலில்,
’கருவிளங்காய்’ என்ற காய்ச்சீரின் முன் ’நிரையசை’ வந்து தளைந்து நிற்பதால், துள்ளும் ஓசை பெற்றுக் கலித்தளை ஆயிற்று.
அடியோடு அடி தளையும் போதும் ’காய் முன் நிரை’ வந்து கலித்தளை ஆயிற்று.
அகவல் துள்ளல்:
செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் முடிமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் இயன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே
இதில் வெண்சீர் வெண்தளையும், கலித்தளையும் விரவி வந்ததால், அகவல் துள்ளலோசை ஆகும்.
இதில் அடியோடு அடி புணரும் போது வெண்சீர் வெண்தளை ஆகும்.
மா முன் நிரை – இயற்சீர் வெண்தளை
காய் முன் நிரை - கலித்தளை
மா முன் நேர் - நேரொன்றாசிரியத்தளை
நேரொன்றாசிரியத்தளை:
நேரசை ஈற்று அகவற்சீர் நின்று நேரசை முதலாக வரும் சீருடன் புணர்வது நேரொன்று ஆசிரியத் தளை ஆகும்.
மா முன் நேர் – நேரொன்றாசிரியத்தளை.
உள்ளார் கொல்லோ தோழி முள்ளிடை
இலவ மேறிய கலவ மஞ்ஞை
எரிபுகு மகளி ரேய்க்கும்
அரிபடு கள்ளியங் காடிறந் தோரே – ஐங்குறுநூறு
இந்த அகவற்பாவின் முதலடி -
உள்ளார் கொல்லோ தோழி முள்ளிடை -
முழுவதும் சீர்கள் நேர் + நேர் என்று ஒன்றின = நேரொன்றாசிரியத்தளை.
எரிபுகு மகளி = நிரையொன்றாசிரியத்தளை (நிரை + நிரை)
மகளி ரேய்க்கும் = நேரொன்றாசிரியத்தளை (நேர் + நேர்)
ரேய்க்கும் அரிபடு = மா முன் நிரை – இயற்சீர் வெண்தளை (நேர் + நிரை)
நிரையொன்றாசிரியத்தளை:
நிரையசை ஈற்று ஆசிரியச்சீர் நின்று நிரையசை வரும் சீருடன் புணர்ந்து உண்டாகும் தளை நிரையொன்றாசிரியத்தளை.
நிரை + நிரை, விளச்சீர் + நிரை = நிரையொன்றாசிரியத்தளை.
உதாரணம்:
திருமழை தலைஇய விருணிற விசும்பின்
விண்ணதி ரிமிழிசை கடுப்பப்
பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே
திருமழை தலைஇய விருணிற விசும்பின் = நிரையொன்றாசிரியத்தளை
விசும்பின் + விண்ணதி = மாமுன் நேர் - நேரொன்றாசிரியத்தளை
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
