வெண்ணிற இரவுகள்
உங்களை ஆழமாக நீங்கள் நேரில் பார்த்ததுண்டா.....?
வெகு சுலபம்....
தாஸ்தாவெஸ்கி - யை படியுங்கள்....
அவரின் படைப்புகளின் இருட்டு, உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்....கனவுகளை தூக்கத்தில் தேடாமல், கனவுகளுக்குள்ளேயே தேடும், கனவல்லாத நிஜம் அவர்..... கை நடுக்கமுள்ளவரிடம் கை குலுக்குவது போன்றது அவரின் படைப்பை படிப்பது என்று எஸ். ரா. சொல்வது எத்தனை பொருத்தம் என்று வெண்ணிற இரவுகளை படித்த பின் புரிய முடிந்தது....தேடிக் கொண்டே தொலைதலை, டெலஸ்கோப்பை உடைத்து விட்டு, பார்க்க அவரின் கதை நாயகனால் முடிகிறது....
வெண்ணிற இரவுகளில் காணாமல் போன அன்று, என் கண்களுக்கு தெரிந்த அமானுஷ்யங்களில் இரவை செதுக்கிக் கொண்டிருந்தார் தாஸ்தாவெஸ்கி. இன்று நாம் காணும் எத்தனையோ முக்கோண காதல் கதைகளின் முதல் முடிச்சை போட்டு விட்டது தாஸ்தாவெஸ்கியின் இந்த வெண்ணிற இரவுகள்தான்....கதவுகளை அடைத்துக் கொண்டு, ஜன்னல்களை திறந்து விடும் எழுத்துக்கள் அவருடையது....நிஜங்களை கருப்பு வெள்ளையாக்கி, முதலும் முடிவுமில்லாத கனவுகளாக்கும் பயணம் அவரின் பாத்திரங்கள்...தனிமனிதனின் ஆழ்மனதில் தீரவே முடியாத பாதை ஒன்று இருப்பதாக நம்மை பயணிக்க வைக்கும் உண்மைகள் அவரின் பக்கங்கள்....
ஒவ்வொரு பக்கத்திலும் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு, 'இது அப்படி, அது இப்படி' என்று கதை சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டிகளின் உருவகம் அவர்...
அவரின் விரல்களில் வழிந்தோடும் துயரங்களே நமது சிந்தனையின் பாரங்களை தளர்த்திக் கொண்டு செல்வதாக தோன்றும் மௌனமொழியின் நடையில், உடையும் பாவனையும், பொம்மலாட்டம் ஆடுவதை தவிர்க்கவே முடியாது....
காதல் காதல் காதல்....... அதுதான் வெண்ணிற இரவுகள்....
எனக்கு தெரிந்த முதல் புதுமைப் பெண் இந்த கதையின் நாயகியாகத்தான் இருக்க முடியும்.....
அவன் வருவான் வருவான் என்று இவனை வேண்டாமென்பதில் தொடங்கும் அவள் பாத்திரத்தின் நடை, அவன் வரவேமாட்டான் என்று நினைத்து இவனின் பேரன்பை பகிர உள்ளுக்குள் நினைக்கையில், அவன் வந்து விட, செய்வதறியாமல் இவனை ஒரு முறை கட்டி அணைத்து விட்டு அவனுடன் செல்லும் போது தொங்கு பாலத்தில் நடக்கிறது....
வாசிக்கும் இதழ்கள் வரண்டு போவதை தடுக்க முடிவதில்லை . மொத்த வாழ்நாளுக்கும்,நான்கு இரவுகளும் ஒரு பகலும் போதுமானதாக மாறுவதை, ரசிக்காமல் இருக்க முடியவில்லை....பெயரற்ற, கதை சொல்பவன், நம் பெயர்களையும் மறக்க செய்வதாக பின்னப்பட்ட வரிகளில் கானல் நீராகி கண்ணாமூச்சி ஆடுகிறார் தாஸ்தாவெஸ்கி.... ஆழ் மனதில் குதிக்கும் அருவிகளின் கீதத்தை இரவெங்கும் தெளித்தபடியே இருக்கிறது வெண்ணிற இரவுகளின் வீதிகளும், தனிமையும்....சுவரெல்லாம் கிறுக்கிய விரலில் சுவர் கொஞ்சம் ஒட்டியிருப்பது போல, வெண்ணிற இரவுகளை படித்து முடிக்கும் நொடிகளில், விழியோரம் ஒட்டிக் கிடக்கிறது தாஸ்தாவெஸ்கியின் கண்ணீர்.....
ஆழ்கிணற்றை சுமந்தே திரிகிறார் தாஸ்தாவெஸ்கி. அவரை எட்டி பார்க்கையில் எதிரொலிப்பது, நமது பேசாத குரல் என்பதில் ஒரு அழியாத வானவில் பூக்கத் துவங்குகிறது .....படம் வரைந்த ஓவியனை காணாமல், கண்டுபிடிக்க, வரைந்த படத்துக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும் எறும்பின் நகலேன நகருகிறது, வெண்ணிற இரவுகளின் மறுபக்கம்.....
உங்கள் ஆசை நிறைவேறாத பொழுதுகளிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறீர்கள்?.... அப்போது, வாழ்வதே ஆசையாகி போகிறது என்பதை நிறைவேறாத பிரமிப்புடன் மனம் திறந்து மௌனம் புக செய்கிறது இந்த வெண்ணிற இரவுகள்.....இரவுகளின் நிறம் மாற்றும் வேலையை, அந்த பெண் செய்கிறாள்... பகலின் தீரா தூரத்தை காதலன் கடக்கிறான்.. இரவுகளையும் பகலையும் தூக்கி சுமக்கையில் பூத்த வியர்வை, பூவென அவளை மனமெங்கும் உருளச் செய்து, மௌனங்களின் ஊடே கண்களை மூடிக் கொண்டு தியானிக்கிறான் கதையின் நாயகன். அவனை நாமே ஒரு கட்டத்தில் தேடுவதை விட்டு விடுகிறோம்..அவன் எங்கு தொலைந்தாலும் அவளிடம் இருப்பதாக நம் மனமென்னும் கதவை, திறந்து காத்திருக்க செய்கிறது,தாஸ்தாவெஸ்கியின் சிந்தனை. விசித்திரம் நிறைந்த சித்திரமாகி வழியும் தாஸ்தாவெஸ்கி, நம் சுவர்களின் அழியாத கோலங்களை படித்தே செல்கிறார்....
காதல் எல்லாருக்கும் எப்போதும் சாத்தியம்.. (அட காதல் கூட இல்லையென்றால் வாழ்ந்தென்ன? வீழ்ந்தென்ன?)
கதையின் நாயகியை காதலிக்கும் நாயகர்கள் மொத்தம் மூன்று... இருவர் கதைக்குள்... ஒருவர் கதைக்கு வெளியே....அந்த ஒருவர் நானாகவும் இருக்கலாம். நீங்களாகவும் இருக்கலாம்.. ஏன்? தாஸ்தாவெஸ்கியாகக் கூட இருக்கலாம்....