ஓர் எழுத்தாளனின் கதை-6

முத்து மாணிக்கத்தை வணங்கி மிக நெகிழ்ச்சியுடன் தினகரன்.. “ சார் என்னை ஞாபகம் இருக்கா ? ரொம்பா நாளைக்கு முன்னால ரெண்டு வருஷம் இருக்கும் ஸ்கூல் பங்கஷன்ல உங்ககிட்ட் ஆட்டோகிராப் வாங்கினேன்ல “ திக்கி திணறித்தான் பேசினான்.

”இல்லையே தம்பி... நிறைய ரசிகர்களை பார்க்கிறேன் ஞாபகம் வச்சிக்க முடிவதில்லை கண்ணா..! ”

”சார்,, கர்சீப் ல ஆட்டோகிராப் கொடுத்தீங்களே... ”

”ஓ சரி சரி அந்த சிறுவனா நீ... உன் ஆவலை கண்டு மிரண்ட நாள் அல்லவா அது...


இவ்வளவு ஆவேசமா எழுதியிருக்கீயே....! பயமறியா கன்று நீ..! சரி தப்பு இல்ல. உண்மையை எழுத துணிச்சல் வேண்டும். சரி இது என் பேனா..! சிங்கப்பூர் போனப்பா எனக்காக வாங்கியது, உனக்கு தரேன்.
நீ எழுதின கவிதையை நீ படிச்சுக்காட்டு....போ மைக்ல படி...! “

இன்ப அதிர்ச்சியும் துன்ப அதிர்ச்சியும் வந்து விட்டது தினகரனுக்கு...
(மனதிற்குள்.. ”என் குரு கேட்டு நான் முடியாதுன்னு சொல்லக்கூடாதே....! என் குரலே ! எனக்கு அந்த பேனா வேணும்.. திக்காம பேசு.. திக்காம பேசு ” கிட்டதட்ட வேறு உலகில் சென்று விட்டான் தினகரன்.)

”சார் எனக்கு திக்குவாய்... சரியா பேசமுடியலைன்னா அசிங்கமா போயிடும். உங்ககிட்ட படிச்சு காட்டுறேன். மைக்ல வேண்டாம் சார். ”


ஆச்சரியமாக பார்த்த முத்துமாணிக்கம் “ ஆழமா அர்த்தமா புரட்சியாய் எழுத தெரிந்த உனக்கு இந்த திக்கு வாய் விஷயமே இல்ல.... ! கண்ணை மூடிட்டு பேசு.... என் பேனா வேணுமா வேண்டாமா?

”வேணும் வேணும் சார்.... இதோ இப்போ இப்போ பேசுறேன். ”

ஒலிவாங்கி....! முன் நின்றான்.

கவிதையின் தலைப்பு..... “ கா.... காட் .காட் “ வாசிக்கும் போது திக்குகிறது.
திரும்பி முத்துமாணிக்கத்தை பார்த்தான்.. கண்ணை மூடு என்று சைகை காட்டி வெற்றி சின்னம் காட்டினார்.

அரங்கு முழுவதும் மகாநாடு கூட்டம் ஆனால் மயான அமைதி

வாசிக்க ஆரம்பித்தான்.... தினகரன்.
கண்ணை மூடினான் . மூடிய இமையில் கவிதை வரிகள் ஓடுகிறது. வாய் பேச ஆரம்பித்தது...!

”காட்டுமிராண்டிகளின் தேசமே..! “ -- தலைப்பு பலத்த ஆக்ரோஷமாக வாசித்தான். --

புறப்பட்ட அவனின் குரல் புயல் நிற்கவில்லை .. ஆவேசம்..! ஆவேசம்..! வார்த்தைகள் அத்துணை ஆவேசம்....

----------------------------------------------------------------------
கோவையில்
வெடித்து சிதறியது
வெடிகுண்டு...!
வெடித்துப்போனது
இந்து-முஸ்லீம் ஒற்றுமை...!

எவன் வைத்தானோ
எதற்கு வைத்தானோ
வைத்தவனுக்கு என்ன பைத்தியமோ?
அவன் இந்த மதமா ?
அது தேவையில்லை
அவன் மனிதனுமில்லை..!

அரசாங்கமே !
அதிகாரம் கொடு..!
என் கவிதைக்கும்
எனக்கும் ஓர்
அதிகாரம் கொடு..!

ஒரே போடு
ஒரே வெட்டு
வீழ்த்திவிடுகிறேன்
என் வீரவார்த்தைகளிலும்
என் வீரவாளிலும்..!

வருவது யுத்தமா ?
வழிவது ரத்தமா?
நானும் பார்த்துவிடுகிறேன்.
ரத்தத்தின் நிறம் சொல்லுமா?
இது இந்து என்று
இது முஸ்ஸீம் என்று .

சொல்லுமா சிவப்பு ரத்தம்..?
இது காவிக்காரனின் ரத்தம் என்றும்
இது பச்சைக்காரனின் ரத்தம் என்றும்
சொல்லுமா சொல்லித்தான்
வெல்லுமா ?
இந்த மண்ணாங்கட்டி மதங்கள்?


தீவிரவாத காட்டேரிகளே..!

மாற்றானை வீழ்த்தி
மதத்தினை வளர்த்திடு
கீதையும் குரானும்
எப்படியடா இப்படி சொல்லும்?


இந்துக்களை அழித்து
இஸ்லாமியம் ஆளட்டும்
குரான் சொல்லியதா ?
முஸ்லிம்களை அழித்து
இந்துமதம் சிறக்கட்டும்
கீதை சொல்லியதா ?
அல்லது
மதப்பன்றி நீ சொல்கிறாயா ?

நெறிப்படுத்த வந்த மதங்களை
வெறிப்பிடித்த மிருகங்கள்
படித்தால் .........
இப்படித்தான்
இப்படித்தான்
குண்டு வெடிக்கும்
வெகுண்டு கொக்கரிக்கும்
மதங்கொண்ட யானைகளாக
மனிதநேயங்களை கொன்று அழிக்கும்.

வேடிக்கை பார்க்க சொல்கிறாயா ?
வாடிக்கையாய் மறக்க சொல்கிறாயா ?

தீ............!
சீறும் வரைதான் தீபம்
சீண்டி விட்டால்..........
தீ பிழம்பாய் வெடிக்கும்
தீவிரவாத்தை எரிக்கும்
தீமையும் கொளுத்தும்
உன்னையும் கொளுத்தும்
பிடிக்கவா தீயினை ? நானும்
படிக்கவா தீ’வீரவாதத்தினை... ?

குத்தும் கத்தி
யார் குத்தினாலும் குத்தும்.
கையில் எடுக்கவா?


இறுதி எச்சரிக்கை எழுதுகிறேன்.
மதவெறிப்பிடித்த நாய்களே !
கலவரங்களை விட்டுவிடு !
எங்களை விட்டுவிடு!
மதங்களை விட்டு ஓடிவிடு!
மனிதர்களை விட்டு ஓடிவிடு!


சட்டமே...! கொஞ்சம் கவனி!
என் மீது ஆத்திரப்படாதே...!
கண்ணை நோக்கி வரும்
பூச்சுக்களை தட்டிவிட்டு கொன்றால்
அதன் பெயர் வன்முறையல்ல...!

நான் தீவரவாதம் பேசவில்லை
நான் பேசியது தற்காப்பு வாதம்..!

மனிதம் காப்போம் !
மனிதர்களை காப்போம் !
மதம் மறப்போம் !
மனிதனாய் வாழ்வோம் !
------------------------------------------------------------------------

படித்து முடித்து கண் திறக்கிறான்....! அரங்கம் முழுவதும் ஒரே இடி முழுக்கம். அரங்க சுவர்களை இடித்து தகர்த்திவிடும் அளவிற்கு இருந்தது அந்த கைத்தட்டல்களின் ஒலி.

தினகரனின் முதுகில் ஒர் உணர்வு,,,,!
கல்லூரி முதல்வர்..! தினகரனின் முதுகை தட்டிக்கொடுத்து பின்பு இழுத்து அணைத்து முத்தமிட்டார். அவர் கண்ணில் ஒரு சில துளிகள் கண்ணீர் ததும்பியது . அந்த துளிகளுக்கு காரணம் இப்படியாக இருந்திருக்கும். “ சாரி தினகரன் .. உன்னை அன்று அவமானப்படுத்திவிட்டேன்.” என்று.
முத்தத்தின் சத்தத்தில் நெகிழ்ந்தவனுக்கு பேச்சு வரவே இல்லை.

தினகரனை முத்துமாணிக்கம் அருகில் அழைத்தார்...! அவரின் பேனாவை எடுத்து அவன் சட்டைப் பையில் வைத்து “ சபாஷ் ..! கவிஞனுக்கு காதல் வருவதை போல கோபமும் வரவேண்டும். இரண்டும் தேவையான பொழுது வெளுப்படுத்துபனே கவிஞன், நல்ல எழுத்தாளன்.” என்று சொல்லி கொடுத்தார். மானசீக குருவின் பேனாவை பெற்ற அவனுக்கு தன்னம்பிக்கையும் அதே நேரம் வழக்கத்திற்கு மாறான சந்தோசமும் பெருகியது.

தினகரனுக்கு அங்கு என்ன நடக்கிறது. அவனால் அங்கு என்ன ஒரு சூழ்நிலை உருவாக்கபட்டது என்று ஒன்றுமே புரியவில்லை.
அந்த கைத்தட்டல்கள் அவனுக்கு புது வாழ்வை கொடுத்தது.

இந்த இனம்புரியா மகிழ்ச்சியான தருணத்திலும் தினகரனின் கண்கள் காவியாவை தேடியது. அரங்கத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடியது அவன் பார்வை.. அந்த பாவை காவியா எங்கே.. ?

கண்டுபிடித்து விட்டான் காவியாவை...! மேடையின் கீழே ஒரு ஓரத்தில் கண்ணில் நீர் பொங்க, மகிழ்ச்சியில் முகம் சிவக்க நின்றுக்கொண்டிருந்தாள்.

பேனாவை எடுத்து காவியாவிடம் மேடையில் நின்றவாறே காட்டினான். அவளும் இரு கைகளின் கட்டை விரலை உயர்த்தி வெற்றி சின்னம் காட்டினாள்.

“ ம்ம்ம் தினகரா ..! என்னை தேடமாட்டீங்களோ ? “ தமிழ் பேராசிரியர்.

“ மேம் .. உங்களைத்தான் தேடினேன்.. என் கண்ணுல நீங்க சிக்கவே இல்லை “ பொய்யுரைத்தான் கவிஞன் தினகரன்.

“ ஓஹோ....! எப்படி சிக்குவேன்.. ? வலை வீசினா மீன் தானே சிக்கும் . “ புன்னகைத்தவாறே தமிழ் பேராசிரியர்.

“ மேம் ,, என்ன சொல்றீங்க “

“ஒன்னும் இல்ல.. முதல்ல கையை கொடு..! இப்போ எப்படிடா திக்காமா பேசின? “
“ தெரியல மேம்.. ஐயா முத்துமாணிக்கம் சொன்னார்.. .. என்னமோ தெரியல மேம் . கண்ணை மூடினேன், இந்த உலகத்தை மறந்து பேசினேன் மேம்... தட்ஸ் ஆல் “

“ சரி கவிஞரே..! “

மிகுந்த மகிழ்ச்சியிலிருந்த தினகரனின் நெஞ்சத்தில் பலகோடி பூக்கள் பூத்த உணர்வு இருந்தது. மின்னல் ஏறிய நரம்புகள் உடலை குலுக்குவதை போல அவனின் உடலை உற்சாகமாக குலுக்கியது .

விழா முடிந்தது. முத்துமாணிக்கம் அவனை மீண்டும் பாராட்டி சென்றுவிட்டார்.

உற்சாக மிகுதியில் தன்னை மறந்த தினகரன் காவியாவுடன் குரலை உயர்த்தி சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கும்போதே... அந்த தீடீர் சம்பவம்... காவியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

(தொடரும் )

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (27-Feb-14, 5:54 pm)
பார்வை : 258

மேலே