எப்போது சாவாய் தோழி
அவரவருக்கு பிரச்சினைகள்
ஆயிரமாயிரம்..!
ஆலயம் சென்று
ஆறுதல் வாங்கி வருவர் சிலர்
ஆறுதலுக்கு ஏங்கி
தோள்களில் சாய்வர் சிலர்.
நீயும் தோழியே
என் தோளில் இப்போது..!
சுமைகளாக
உன் தலையல்ல
உன் தற்கொலை மிரட்டல்...!
பிறந்து வளர்ந்து
விட்டாயே...?
அறிவு அழுகி
போய்விட்டதோ ?
தோளில் சாய்ந்தால்
தலைவருடி விடுவேன்
நினைத்தாயோ....?
தலைப்பிடித்து
தள்ளி உதைப்பேன் உன்னை..!
ஒன்றே ஒன்று
சொல்.. பின்பு
அதோ ..!
அந்த பாறையில்
முட்டி மோதி
செத்து விடு...!
இதுவரை..!
நீ சாதித்தது எது ?
படித்திருக்கிறேன் என்கிறாயா ?
சம்பாதிக்கிறேன் என்கிறாயா..?
காதலித்தேன் என்பாயா ?
வீடு கட்டினேன், கார் வாங்கினேன்
மார்தட்டி சொல்வாயா?
அடியே...!
நீ சொல்லும்
இவைகள் யாவும்
வெறும் அற்பமாயைகள்...!
இதைவிட
மாபெரும் அற்புதங்கள்
என்ன என்ன செய்தாய்.. ?
ஒரு சமுதாய மாற்றம்..?
ஓர் அரசியல் மாற்றம்..?
அன்னை தெரசா போல
பாரதியின் புதுமைப்பெண்ணாக
ஏதாவது ஓரு புரட்சி ... ?
இது முடியாதா... ?
இது முடித்தாயா ?
சாலையில் அடிப்பட்ட
நாயினை காப்பாற்றி - அதன்
வாலினையாவது ஆட்ட வைத்தாயா?
இந்த பெண்
---ஆணாதிக்க சமுதாயத்தின்
---ஆணி வேரையே பிடுங்கியவள்
சொல்லுமா
உந்தன் பெயரை
நாளை சரித்திரம் ?
அல்லது
--இளம் பெண் தற்கொலை
--காதல் தோல்வியா?
கூவி விற்று
அவமானப்படுத்துமா
உந்தன் பெயரை
இன்றைய செய்தித்தாள்கள் ?
இனியும்
இது என் வலி
எனக்கான வழி
என்பாயோ.. ?
தோழியே....!
தோழனாக உனக்கு நான்.
தூக்குகயிறு,
தூக்க மாத்திரைகள்,
விஷம் நிறைத்த குப்பி,
கழுத்தை அறுக்கும் கத்தி
ஏதேனும் ஒன்று
உன் விருப்படியே
பரிசுப்பொருளாய் தருகிறேன்.
கோழைகளின் எண்ணிக்கையாவது
இந்த வீரமண்ணில் குறையட்டும்.
எப்போது
சாக போகிறாய்?
நேரமாயிற்று
மாலை வாங்க
போக வேண்டும்.
வேறு வேலையை
நான் பார்க்க வேண்டும்.
எப்போது
செத்து மடிவாய் ?
என் ஆருயிர்
சிநேகத கோழையே..?