உள்ளவர்களே சிந்தியுங்கள்

சோகத்தின் விளிம்பில் விழிகள்
ஏக்கத்தின் எல்லையில் பார்வை !
ஏழ் 'மை'யில் வரைந்த ஓவியம்
​ஆழ்மிகு அடித்தளத்தின் ஆதாரம் !

உடுக்கவும் உடையிலா உயிரினம்
உணவிற்கே வழியிலா மழலை !
வறுமையில் வாடிடும் சிறுமலர்
பள்ளிக்கு பாதையறியா கிள்ளை !

இருளில் மூழ்கிட்ட தலைமுறை
வாழ்ந்திட வழியறியா வளர்பிறை !
தேய்ந்திட்ட தேகமுள்ள ஒரு இளமை
காய்ந்திட்ட நிலையில் ஒரு சோலை !

எக்காலமும் இந்நிலையே இவர்கள்
எக்காளமிடும் மனங்களே பாருங்கள் !
வக்காலத்து வாங்கிட வரவில்லை
வருங்கால வாழ்விற்கு வழியென்ன !

உழைக்காமல் சேர்த்திட்ட பணமும்
பிழைத்திட ஏய்த்திடும் மனங்களும்
உலகில்தான் வாழ்ந்து பயனென்ன
உய்த்திட இவர்களுக்கும் வழியென்ன !

கள்ளமறியா உள்ளங்கள் இவர்களும்
கடுகளவும் தவறறியா தளிர்களே !
பிறந்தவர் வாழத்தானே வேண்டும்
இரந்து கேட்கின்றேன் உதவிடுங்கள் !

காலை மலர்ந்தாலும் காலம் பிறக்கவில்லை
நாளும் விடிந்தாலும் நல்வழி தோன்றவில்லை !
எதிர்காலம் இல்லையே என்றும் இவர்களுக்கு
இலையுதிர் காலமா என்றுமே இவர்களுக்கு !

ஏழ்மை எனும் அரக்கனே ஒழிந்திடுக
ஏழை எனும் சாதியே அழிந்திடுக !
உடலே சொந்தமில்லை இறுதிவரை
உள்ளதை சொல்கிறேன் உறுதியாய் !

உள்ளவர்களே சிந்தியுங்கள் சிறிதேனும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Mar-14, 8:59 am)
பார்வை : 424

மேலே