மாவீரன் சேகுவேரா இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு-3
அமெரிக்க ஏகாதிபத்தியத்தைமூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என 'சே' திடமாக நம்பினார்.
கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ''ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்'' எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம். அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ''அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தைநான் வேரறுப் பேன்'' என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் 'சே'.
சே குவேராவுக்கு முடிவுரை எழுதக் களத்தில் இறங்கியது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ!
சி.ஐ.ஏ...
உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார், எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைபடத்தில் இந்த ஓநாயின் காலடி படாத இடமே இல்லை.
'சே'வின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்புப் பேச்சும் சி.ஐ.ஏ&வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ட்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ. தன் முழு எரிச்சலையும் 'சே'வின் பக்கம் திருப்பியது. காஸ்ட்ரோவைக் காட்டிலும் 'சே'தான் மிகவும் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.
விழும் இடமெல்லாம் விதைபோல விழுவதும், எழும் இடமெல்லாம் மலை போல எழுவதுமாக இருந்த 'சே', சதித் திட்டம் குறித்து அறிந்தும் புன்னகைத்தார். தொடர்ந்து சீனாவுக்கும் அல்ஜீரியாவுக்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம்அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கப்படும் மூன்றாம் உலகக் குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளா- தாரரீதியாகப் பாதுகாப்-பளிக்கவேண்டி-யது அதன் தார்மிகக் கடமை என முழங்கினார். தொடர்ந்து தான்சானியா, கானா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதி-காரத்தாலும் ஆப்பிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
மூன்று மாத & கியூபா அரசால் அங்கீ-கரிக்கப்படாத &பயணத்துக்குப் பிறகு, 'சே' 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு 'சே' நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு 'சே'வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை. அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, 'சே'வை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது 'சே'வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் 'சே' கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.
'சே எங்கே?' பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. 'சே'வை சுட்டுக் -கொன்றுவிட்டார்காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.
சே காஸ்ட்ரோ இருவருக்கு-மிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படை-யில் 'சே' ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கிற செயல் புயல். காஸ்ட்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பது 'சே'வின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு.இருவருக்கு மிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை!
உண்மையில் 'சே' அப்போது காஸ்ட்ரோவுக்கும், அவரது தாய்க்-கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி-விட்டு தனது அடுத்த புரட்சிக்காக காங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ட்ரோ எவ்வளவோ முயற்சித்தும் 'சே'வை நிறுத்த முடியவில்லை. 'மக்களுக்கான பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது' என 'சே' காஸ்ட்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.
'சே எங்கே?' எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ!
'சே'வை அழித்தொழிக்கத் தேடி வரும் சி.ஐ.ஏ&வுக்கு துப்பு கிடைத்து விடக்கூடும் என காஸ்ட்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு 'சே' சென்று விட்டதாக காஸ்ட்ரோ சொன் னதை நம்பி, வியட்நாம் காடுகளில் 'சே'வை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில், 'சே'வை காஸ்ட்ரோ சுட்டுக் கொன்றதற்கு தங்களிடம் ஆதா ரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத் தொடங்கியது. இது காஸ்ட்ரோவுக்கு மிகவும் நெருக்கடியை உருவாக்க, வேறு வழி இல்லாமல் அக்டோபர் 3, 1965&ல், பொதுமக்கள் முன்னிலையில் 'சே' தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் பகிரங்கமாக வெளியிட்டார் காஸ்ட்ரோ. கடிதத்தில் 'சே' கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கானகாரணத்தையும், காங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டி ருந்தார்.
'சே', காங்கோ காடுகளில் துப்பாக்கியுடன்களத்தில் இருந்தார். கியூபா வீரர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் காங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல், அந்த புரட்சி 'சே'வுக்கு வெற்றி தேடித் தரவில்லை. காங்கோ நாட்குறிப்புகள்எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.
அமெரிக்க சி.ஐ.ஏ. கழுகுகள் அவரைத் தேடி காங்கோ காடுகளுக்குள் புகுந்தபோது, 'சே' தன் பட்டாளத்துடன் செக்கோஸ் லோவியாவுக்கு இடம்பெயர்ந் திருந்தார்.