உதடெரிந்து போன முத்தங்கள்

மயிர் நீப்பின் உயிர் நீப்பதாய்
பொய் பேசித்திரியும்
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றி மூத்த மொழி
கப்பலேறிய தன்
மானம் பற்றியறியாது
அம்மணமாய் செத்து மிதக்கிறது
உனக்கும் எனக்கும்
இடையிலான உப்பு நீரில் ...

எல்லாம் விதியென்று
ஆன பின்
மரணம் குத்தகைக்கு எடுத்த
அழிபெரு நகரின் சாக்காடுகளில்
வலியொப்பாரியை
யார் மீட்டெடுப்பது ?

உலகதிர கொத்துக்கொத்தாய்
எம்முயிர்கள் கொய்யப்பட
ஊழிக்கூத்தின் உடுக்கடிப்பில்
கொடுந்துயில் கொண்ட
கடவுளர்களை
எந்தப் பாடையில் கொண்டு சென்று
எந்தக் கல்லறையில் புதைப்பது ?

உயிர்களை விதைத்து
உதிரத்தை ஊற்றி
வளர்த்த பயிர்களின் பூக்களில்
நீள்நெடு சாபம்
அமிலங்களை பூச்சிக்கொல்லியென
தெளிக்கையில்
வேடிக்கை பார்த்த சாமிகளை
எவெரெச்சியினால் காறி உமிழ ?

துருப்பிடித்தாயுதங்களை
புதுப்பித்துக் கொள்ளலாம்
குப்பிகள் கூட குறைவில்லை -
ஆயினும்
உதடெரிந்து போன
எமக்கான முத்தங்களை
எந்த இறைவன் திருப்பித் தருவான் ?

கூரையை பிய்த்துக்கொண்டு
கொடுக்கவியலா தெய்வங்களால்
கூரையோடு கொளுத்த
முடியுமென்கிற போது
பெருந்துயர் தீப்பிடித்துப் பொசுங்கி
செத்தழுகிக் கிடக்கும்
எம்மிறுதி நம்பிக்கைகளுக்கான
சொற்களை எங்கே தேடுவது ?

எழுதியவர் : பாலா (4-Mar-14, 8:13 pm)
பார்வை : 135

மேலே