சுனாமி
சுனாமி
சூட்சுமம் ஒன்றே
சூத்திரமாகிப் போன
நாமினி.
நரகத்தின்
நாதங்கள் யாவதூவும்
நர்த்தனிக்கத் தெரிந்தவள் நீ.
எங்கள்
நகங்கள்கூட
நகைக்க மறந்துவிட்டன.
மறைத்தவள் நீ.
கரைமீது உனக்கு
ஏன்இந்தக்
கண்மூடிக் காதல்?
காட்டுமிராண்டித்தனமாக…
இதுவரைகாட்டிவந்த
பச்சைக்கொடிகூட
சிவந்துவிட்டது இப்போது,
எங்கள் பிஞ்சுக்களின்
நைந்துப்போன நகக்கண் துளிகளால்.
பைத்தியமாக்கியிருந்தால்கூட
வைத்தியம் பார்த்திருப்போம்
இப்படி
பதியமாக்கிவிட்டாயே
பச்சைத்தண்ணீருக்குப்
பசுந்தாள் உரமாய்.
இத்தனைஉயிர்களும்
எப்படித்தான் இருக்கவிடுகின்றனவோ உன்னை
இன்னும்
இத்தனை நிம்மதியாய்.
நாங்கள்வளர்த்த
கட்டுமரங்களுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது
எங்கள்
இருதயத்தின் வலி
என்னவென்று.
எங்களை வளர்த்த
உனக்குமட்டும் ஏன் தெரியவில்லை.
பார்,
எப்படி நொறுங்கிப்போய்
கிடக்கிறதென்று.
விஞ்சியிருக்கும்
எச்சங்களைப் பார்த்தாவதுப்
புரிந்துகொள்,
இன்னொருமுறை வேண்டாமென்று.
எழுந்துவந்த
கடல்நீரெல்லாம் காய்ந்துவிட்டது;
ஏறிட்டுப்பார்,
எங்கள் கண்ணீர்மட்டும்
காயமனமின்றி...