இசை நாற்காலிகள்

இசை நாற்காலிகள்
விளையாட்டு ஒவ்வொரு
வீட்டிலும் நாம் அறிந்தோ
அறியாமலோ நடந்து
கொண்டே இருக்கிறது!

அப்பாவின் ஆடும்
சாய்வு நாற்காலித் தூளியில்
செல்லப் பூனைக்குட்டி ’லல்லு’
கண்களை மூடிப் பொய்த்
தூக்கம் போடுகிறது!

அடுக்களை வேலை
இல்லாத வேளைகளில்
அம்மா அமர்ந்திருக்கும்
சன்னலுக்குக் கீழே ‘டைகர்’
கீழ்க் கண்ணால் நோட்டமிட்டபடி!

ரங்கு டைகரைக் கைகளில்
எடுத்து அவன் அறைக்குத் தூக்கி வர
அவனது குட்டி நாற்காலியில்
அக்கா மீனு அலட்சியமாக
அமர்ந்திருக்கிறாள்!

அக்கா மீனு ‘வீட்டுப் பாடம்’
எழுதுவதை மறந்து
அம்மாவுக்குத் தெரியாமல்
தொலைக்காட்சியில்
’போகோ’ பார்க்கிறாள்!

இப்பொழுது ’லல்லு’
உலாப் போயிருக்கிறது
அப்பா அவர் சாய்வு நாற்காலியில்
ஆனந்தமாகச் சாய்ந்தபடி
செய்தித்தாள் வாசிக்கிறார்!

அம்மா சன்னலுக்கடியில்
தலைசாய்த்து ஓய்வெடுத்து
கண்களை மூடி ’அக்கடா’ வென்று
ஆயாசத்தில் புரண்டு
கொண்டிருக்கிறாள்!

மீனு எழுந்து விட்டாள்,
ரங்கு அவனது குட்டி
நாற்காலியில் டைகரை
மடியில் வைத்துக் கொண்டு
அமர்கிறான்!

பாட்டும் சங்கீதமும்
இன்றி ஒவ்வொரு வீட்டிலும்
இசை நாற்காலிகள் ஆட்டம்
நடந்து கொண்டுதான்
இருக்கிறது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Mar-14, 1:49 pm)
பார்வை : 276

மேலே