நெஞ்செல்லாம் கொதிக்குதடி பஞ்சமான உன் பொழப்பு கண்டே

காலையிலே களை எடுக்க
காடு வழி போற பெண்ணே
தலை நிமிந்து பாக்காம
காலு ரெண்டு கடுகடுக்க
கண்ணு ரெண்டு துடிதுடிக்க
பாவி மனம் தவிக்க
பறக்க பறக்க போறியே !

நெருஞ்சி எல்லாம் பூத்து கிடக்கு
தெரிஞ்சு தான் போற நீயும்
அஞ்சாறு கல் தொலைவாம்
ஆள் இல்லா காட்டு வழியாம்
அறிஞ்சே நீயும் போறியே !

பழய கஞ்சி பாரம் சுமக்க
பழய நெனப்பு ஏனோ துடிக்க
பாத்தி வரப்பு வழுக்க வழுக்க
பாத்து நீயும் போவியோ
பாத வழி போறவளே !

கால வெயிலு களபேத்த
கண்ணு ரெண்டு களை எடுக்க
கல்லு முள்ளு குத்திட
கருமண்ணு வயலாம் கடின வயலாம் ..

கொத்தெல்லாம் மடங்கவே
கொத்தி கொத்தி களை எடுக்க
ஒத்த கை களைச்சு போக
மத்த கை மாத்தி கொத்த
மண்டைய உச்சி வெயிலு பிளக்க
மத்தியானம் வந்ததே !

பழய கஞ்சி பசிய கிளற
பச்சமிளகா பல்லு கடிக்க
பசியாற நீயும் குடித்தே
பட்டினிய போக்கிடுவியோ !

சூரியனும் சோர்ந்து உறங்கவே
சுருங்கியே மாலையும் வந்ததே
சுறுசுறுப்பாய் நீயும் கிளம்ப
சுள்ளி பொறுக்கும் காடுவழி
கள்ளி பூத்த காட்டுவழி
கன்னி நீயும் கால் நடையே போறியே !

இருட்டெல்லாம் மிரட்டும் முன்னே
நெருப்பாக போற பெண்ணே
நெஞ்செல்லாம் கொதிக்குதடி
பஞ்சமான உம் பொழப்பு கண்டே
நெஞ்செல்லாம் கொதிக்குதடி
பஞ்சமான உன் பொழப்பு கண்டே !

எழுதியவர் : (12-Mar-14, 7:12 pm)
பார்வை : 78

மேலே