மனம் என்னும் மாயம்

மனம் ஒரு மாயக்கிணறு.
இறைக்க இறைக்க ஊறும்.
ஊறியூறி வழியும்.
இறைப்பதை நிறுத்திவிட
ஊறுவது நிற்கும்.
ஊறுவது நிற்க
உள்ளெல்லாம் மலரும்.

மனம் ஒரு மாயக்குழி.
அடியில்லாப் பெரும்பள்ளம்.
எதையிடினும் நிரம்பாது
நிரப்புதல் நிறுத்த
தானே நிறைந்துவிடும்.

மனம் ஒரு மாய அடுப்பு.
அஹங்கார விறகிட்டு
ஆசைத்தீ எழுந்தெரிய
விறுப்பும் வெறுப்புமாய்
விறுவிறுச் சமையல்.
விறகுயிழுத்துவிட
விரைவில் அணையும் அடுப்பு.

மனம் ஒரு மாயக்கன்னி.
ஐந்து தோழியர் கூடவர
ஆரவார ஊர்வலம்
அல்லும்பகலும் நடத்துகிறாள்.
தோழிக்கூட்டம் துணையகல
வீடுசேர்வாள் விரைவில்.

மனம் ஒரு மாயக்கண்ணாடி.
ஐந்தகல் வெளிச்சத்திலே
ஈர்ப்பதெல்லாம் காட்டும்.
அடையும்வரை வாட்டும்.
வெளிச்சம் இல்லையெனில்
காட்சியும் மறைந்துவிடும்.

மனம் ஒரு மாயவீடு.
ஐந்து கதவு ஆயிரம் அறைகள்.
இருக்கும் ஒருவனும்
எப்போதும் உறக்கத்தில்.
கதவுகள் மூடிட - அவன்
உறக்கம் கலையும்.
அவன் விழித்திட
வீடு உறங்கிடும்.

மனமும் இறையும்
ஒருவகையில் ஒன்றென்பேன்.
இருக்குமிடம் தெரியாது.
இருப்பையுணர இருப்பொழியும்.
ஒன்றோங்க ஒன்றடங்கும்
ஒன்றிழைய ஒன்றாகும்.

மனமழிய இறை புரியும்.
உள்வெளி ஒன்றாகும்.
ஒன்றாகிப்போனபின்னர்
வென்றிடலாம் பிறப்பிறப்பை.

எழுதியவர் : இல. சுவாமி நாதன் (13-Mar-14, 7:10 pm)
சேர்த்தது : L Swaminathan
பார்வை : 99

மேலே