வந்தது வந்தது

வந்தது வந்தது தேர்தல் வந்தது
வாழ்க ஒழிக சத்தம் வந்தது,
தந்தது தந்தது வாக்கைத் தந்தது
தட்டிப் பறிக்கும் வழியும் வந்தது..

நாடு காப்பதாய் வேடம் பலவிதம்
நன்மையே செய்வதாய்ப் பேச்சு பலவிதம்,
வீடு காத்திட வித்தைகள் பலவிதம்
வெற்று வார்த்தை உறுதிகள் பலவிதம்..

கொள்கை மறந்த கொள்ளைக் கூட்டணி
கோபம் வந்தால் கூடுவர் மாற்றணி,
வெள்ளை என்பது வேட்டியில் மட்டுமே
வென்றிடும் பக்கமாய்ச் சாய்ந்திடத் திட்டமே..

வாரிசு அரசியல் வன்முறை வழிவகை
வள்ளல் போர்வையில் வஞ்சகர் கூட்டம்,
பாரிதைத் தேர்தலில் பலவகை ஏய்ப்பு
பற்று கொள்கை பறந்திடும் காற்றில்..

சாதி மதமெனச் சாய்ப்பார் ஆளை
சகலமும் நீயெனத் தட்டுவார் தோளை,
நீதி நேர்மை நெருப்பிலே போச்சு
நெருப்பில் உருகிடும் நெய்போல் பேச்சு..

உன்னிடம் உள்ளது உண்மை ஓட்டு
உன்னிடம் வருவர் பலரதைக் கேட்டு,
வென்றிடும் வழியை நல்லதாய்க் காட்டு
வேதனை தடுத்திட நல்லதில் போட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Mar-14, 6:32 pm)
Tanglish : vanthathu vanthathu
பார்வை : 89

மேலே