அம்மா ரொம்பக் கெட்டவதான்டா - வானொலி நாடகம்

வர்ணனைகள் இல்லாமல் வசனம்
மட்டுமே கொண்ட ரேடியோ நாடக வரிசையில்
இந்த சிறுகதை எழுதப் பட்டுள்ளது

*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

அம்மா. . . வயிறு பசிக்குதம்மா. . .

கொஞ்சம் பசி அடக்கிக்கோடா கண்ணு. . . அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல சோறாக்கித் தருகிறேன். . .

போம்மா. . . . நேத்து ராத்திரியில் இருந்தே நீ இதைத்தான் சொல்லிட்டுருக்கிறாய். . . ராத்திரி சோறு சாப்பிடாம படுத்தா சாமி வந்து கண்ணை குத்திடும்னு முன்னாடி சொல்லுவே. . . நேத்து ராத்திரி ஏம்மா சாமி என் கண்ணைக் குத்தல ?,

அதுவா. . . வந்து. . . . அதெல்லாம் தினமும் மூணு வேளை சோறு சாப்புடுறவங்களைத்தான் ராத்திரி சாப்பிடாம படுத்தா சாமி வந்து கண்ணைக் குத்தும். . . நம்மளை எல்லாம் குத்தாதுடா. . . .

ஓஹோ. . . அப்படின்னா. . சாமி ரொம்ப நல்லவரு என்னம்மா ? .

ஆமாம்பா. . . சாமியும் நல்லவரு . . உங்க அப்பாவும் நல்லவரு. . . சாமிக்கு நல்லவங்க நிறைய பேர் தேவைப் படுது. . . அதனாலதான் சாமி உங்க அப்பாவையும் கூட்டிப் போயிடுச்சு. . .

உன்னை ஏம்மா சாமி கூட்டிக் கொண்டு போக வில்ல. . அப்படின்னா. . நீ நல்லவ இல்லையாம்மா ? .

ஆமாமடா. . கண்ணு. . . அம்மா ரொம்பக் கெட்டவ. . . அதான் சாமி அம்மாவைக் அழைக்கவே இல்லை. . .

அப்பாவும் உன்னை மாதிரி கெட்டவரா இருந்திருக்கலாம். . . சாமியும் அழைச்சுருக்காது. சரிதானம்மா ? .

சரிதான்டா . . கண்ணு. . .

அய்யோ. அம்மா .. . விட்டால் நீ இப்படி பேசிக் கொண்டே இருப்பாய். . . எனக்கு பசிக்குது அம்மா. . .

கொஞ்ச நேரமடா. . . இப்ப வெங்கி மாமா வந்துடுவாரு. . . அம்மா அவர் கூடப் போய்விட்டு திரும்பி வரும்போது அரிசி பருப்பு உனக்கு பண்ட பலகாரம் எல்லாம் வாங்கியாறேன். .. .

என்னம்மா நீ. . . இப்படி என்னைக்காவது வெங்கி மாமா கூடப் போய்விட்டு வரும் போது எல்லாம் எல்லாம் வாங்கி வருகிறாயே .! ! , வெங்கி மாமாவும் உன்னைப் போல கெட்டவராம்மா ?, ,

இப்படி எல்லாம் பேசக் கூடாது. . . நீ வளர்ந்து படிச்சு பெரியவனாக ஆகி விட்டாய் என்றால் நீயே இதெல்லாம் வாங்கியாருவ. . அப்புறம் வெங்கி மாமாவுக்கு வேலை இல்லாமல் போயிடும்.அது வரை வேற வழி இல்லடா.. . . அதோ வெங்கி மாமா வந்துட்டாரு. . . வாங்கண்ணே. . .

என்னம்மா .. . வழக்கம் போல வேலையை ஆரம்பிச்சிட்டாயா ?, ஏம்மா . . இப்ப பணத்துக்கு என்ன அவசரம் ?,

புள்ள நேத்து ராத்திரியில் இருந்து சாப்பிடலண்ணே. . பசியால துடிக்கிறாண்ணே. . மனசு கேட்கல. . அதான் உங்களை வரச் சொல்லி விட்டேன். . .

அதுக்கு இல்லம்மா.. . ஏம்மா உடம்பைக் கெடுத்துக்குற ? இது எல்லாம் அடிக்டி . . . ரொம்ப தப்பு அம்மா. . .

என் புள்ள கைப்புள்ளையாக இருந்தாலும் தாய்ப் பால் கொடுத்தாச்சும் பசியாற்றலாம். . .தாய்ப் பாலும் இரத்தத்துல இருந்து பிரிஞ்சு வர்றதுன்னு பெரியவங்க சொல்லுவாங்கண்ணே. . .

என்னமோம்மா. . . இப்படி ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சுடுவ. . .. ஏன்தான் இப்படி ரத்த வங்கி முகவர் தொழிலைத் தேர்ந்தெடுக்க வச்சிட்டான்னு. . நானே அந்த ஆண்டவனைத் திட்டுகிறேன். . . . இரத்தம் எடுத்து காசு கொடுக்கும் இந்த ஈனச் செயலுக்கு என்னையும் துணை போக வச்சுட்டானேப் பாவி. . .

ஆண்டவனைத் திட்டாதீங்க அண்ணே. . என்னமாதிரி அபலையையும் படைச்சு ஆதரவாக உங்களேப் போன்ற நல்லவர்களையும் படைச்சு. . ரத்த வங்கியையும் உருவாக்க வழியாவது செய்தானே. . .ஆண்டவனுக்கு நன்றி அண்ணே. .

*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

வறுமையின் கொடுமையிலும் ஏதேனும் ஓர் நேர் வழியில் வயிறு கழுவும் இது பொன்ற அபலைப் பெண்களுக்கு இப்படைப்பு சமர்ப்பணம்

அன்புடன் - மணியன்

*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (14-Mar-14, 8:21 pm)
பார்வை : 768

மேலே