கரிசல் மண்ணில் ஒரு காவியம்17அத்தியாயம் 17

கரிசல் மண்ணில் ஒரு காவியம்17

அத்தியாயம் 17

கூண்டுக்கிளி ஒன்று விடுதலை பெற்று அது தன் சிறகுகளை விரித்து ஆனந்தமாக விண்ணில் பாய்ந்து பறப்பது போன்ற உணர்வில் கமலா ஆனந்தக்களிப்பில் அங்குமிங்கும் துள்ளிக்குதித்து உற்சாகமுடன் ஓடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தன் மகிழ்ச்சியைக் கொண்டாடினாள்.பழமையை பாராட்டி வந்த ஆச்சி தோற்றுப்போனவளாய் ஒரு மூலையில் சுருண்டு கிடந்து கமலாவின் எழுச்சி கண்டு ஏதும் பேசமுடியாதவளாய் உம்மென்ற மூஞ்சியுடன் தனிமைப்பட்டுப் போனாள்.

அதிகாலைப்பொழுதில் பறவைக் கூட்டங்கள் பாடிப்பறந்த வண்ணமாக இருந்தன.வானம் வெளுத்து அது தன் வீதியெங்கும் மஞ்சள் வண்ண ஒளியைப் பூசி மங்களம் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தது.கமலா இன்று மீண்டும் பள்ளிக்குச்செல்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டதோ என்னவோ அந்த விடிகாலைப் பொழுதும்.வழக்கத்திற்கு மாறாகவே உலகம் புத்துணர்ச்சி பெற்று புதுப்பொலிவுடன் காணப்பட்டது.

கமலாவின் விடுதலைக்காகப் போராடிய ராஜா கமலாவின் சுதந்திர கீதத்தை ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு ரசித்துக்கொண்டிருந்தான்.அப்போது ஜன்னல் வழியே ஒரு காகிதச்சுருள் பறந்துவந்து அவன் காலடியில் பணிந்தது.என்னவென்று எடுத்து அதை விரிக்கிறான்.அது கமலாவின் கைவண்ணத்தில் உருவான அவள் இதயம் வரைந்த எழுத்தோவியம்.

பௌர்ணமி ஒளியில் பரவசம் ஆடும் கடல் அலைகளென அவன் கற்பனைகள்.ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கின்றன.வள்ளுவன் எழுதிய முதல் குரல் கண்டு தமிழன்னை எந்த அளவில் ஆனந்தம் அடைந்திருப்பாளோ அந்த ஆனந்தத்தின் விளக்கம் இன்று அவன் முகத்தில் ஒளிர்ந்தது.இன்பத் திளைப்பில் அவன் இதயம் துடித்த வேகத்தின் அளவை எந்தக் கருவி கொண்டும் அளவிட முடியாது.விழிகள் விரிகின்றன.கடிதத்தில் விளைந்து குவிந்து கிடக்கும் மணிகளை அள்ளி ஆராதிக்க ஆவல் கொண்டு பாய்கின்றன.அந்தப் பாய்ச்சலின் வெப்பத்தைக் குளிர்விக்க விழிகளில் பனித்துளிகள் துளிர்க்கின்றன.

எழுத்தில் கோர்க்கப்பட்ட அந்த முத்து மாலைகளை அவன் கண்கள் தம்மில் ஒத்திக்கொள்கின்றன.வாசம் நுகர்ந்து பாசமுடன் படிக்கின்றன.ஆசைகள் வரிகளை நகர்த்துகின்றன.

“என் இதயம் நிறைந்த ராஜா!இன்று உன்னால் எனக்கு விடுதலை.இது என் வாழ் நாளில் ஒரு விடிவு காலம்.எனக்கு விடியலைத் தந்துதவிய பகலவன் நீ!உனக்கு நன்றி சொல்ல என்னிடம் போதுமான அளவில் சொற்கள் இல்லை.தேடிக் கண்டு அகப்பட்ட சில சொற்களால் மட்டும் போற்றி உன்னை ஆராதிக்கிறேன்.என் கரங்கள் உன் திசை நோக்கித் தொழுகின்றன.என் விழிகள் உன்னை அர்சிக்கத் தேடுகின்றனஅவைகள் தீர்த்தம் நிரப்பிக்கொண்டு காத்துக்கிடக்கின்றன.என் இதழ்கள் உன் புகழ் பாடுகின்றன.இந்தப் பூஜை வேண்டுதலை ஏற்றுக்கொள்ள பள்ளியில் வீற்றிருக்க வேண்டுகிறேன்.

நன்றி!

இப்படிக்கு
உன் அன்பின் மலர் கமலம்.”

பிறவிக்குருடன் பார்வை பெற்றார்ப்போல் ஆனந்தக் கூத்தாடினான் ராஜா.அக்கடிதத்தை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ஜன்னலைப்பார்க்கிறான் ராஜா.அங்கே முல்லைத் தோட்டமாய் கமலாவின் காட்சி.நாடு மக்களாட்சி மலர்ந்த நாளில் நிறைந்த மலர்ச்சி.

“ராஜா”அன்புத்தாயின் அழைப்பு.”பள்ளிக்கூடம் போக நேரம் ஆகலையா?”

“இதோ வாரேம்மா” கடிதத்தை பூப்போன்று இதமாக மடித்து தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.

“ஆமா அங்க என்னடா பண்ற”

(தொடரும்}.

கொ`பெ`பி`அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (15-Mar-14, 7:43 am)
பார்வை : 215

மேலே