விடியலைத் தொலைத்த வானம்
இருள்விரட்டும்
வெளிச்ச தேடலுக்கான
உன் பயணம் -
இன்னும் முடிவு பெறவில்லை
கனத்த இதயங்களுக்கு
பட்டுபூச்சியின் கதறல்
காதுகளுக்கு எட்டுவதில்லை -
வருத்தப்பட்டவர்களின் வரிகள்
நிர்வாணத்தை தொலைத்து
தொலைதூரங்களுக்கு அப்பால்
ஒரு புள்ளியாய்....
ஒரு பூஜ்யமாய்...
தொலைந்து போனது.
பாடங்களில் உள்ளது மட்டும்
சரித்திரமில்லை
அநேகங்கள் அவைக்கு வராமலே
அழிக்கப்பட்டன.
படிக்க நீ ஆசைப்பட்டால்
விளக்கை நிறுத்தி
இருட்டில் தேடு.
ஆச்சரியங்கள் உன்னை
ஆச்சரியப் படுத்தும் ......
இருள்விரட்டும் வெளிச்சங்கள்
இருட்டிலே ....
ரோஜாக்கள் முளைக்கும்
மண்ணில்தான்
கள்ளிகளும் கவி பாடுகின்றன ....
பீரங்கியின் சத்தமும்
நிற்கப்போவதில்லை
புத்த மடாலய மணியோசையும்
ஒய்வெடுப்பதில்லை!
சாக்காட்டு ராஜபாட்டையில்
சவங்கள் உயிர்த்தெழுந்து
காண்பவர் எல்லோரையும்
காவு கொள்கிறது -
காவல் முள்
கண்ணிமைக்கும் நேரத்துக்குள்
ரோஜாவை கிழித்து
ரோட்டோரம் வீசுகிறது
இதுவரை கண்டுபிடித்த
எந்த ஆயுதங்களும்
இவர்களை கொல்லவில்லை
இந்த கரைபோட்ட துண்டு நாய்கள்
என் வீட்டிலிருந்தும்
உன்வீட்டிலிருந்தும்
எல்லாமும் களவாடின
இவர்களின் நாமத்தை
இன்னும் பலர் பூஜிப்பதால்
எதிர் பார்ப்புகள்
சதுப்பு நிலங்களுக்குள்
சங்கமம் ஆகின்றன-
மொத்தத்தில் -
புத்தன் பிறந்த பூமியில் யுத்தக்களம்
புற்கள் கூட ரத்தநிறம்
விடியலைத் தொலைத்த
ஒரு வானம்
வெறிச்சோடிக் கிடக்கிறது.