மரித்தது மனிதம்

பட்டப் பகலில்
பரிதாபமாய்
இரக்கமற்று
இரத்த வெள்ளத்தில்
கேட்பாரற்று
கேவலமாய்

மரித்துக்கொண்டிருந்தது ...
மனிதம்

சட்டைச் செய்யாமல் சிலர்
சட்டத்திற்குப் பயத்தில் சிலர்
சட்டையில் இரத்தக்கறைப் படியுமெனச் சிலர்
அலைப்பேசி அளவளாவல்களில் சிலர்
விலை வாசி விமர்சனங்களில் சிலர்
சினி புராணம் உச்சரித்தப்படி சிலர்
சுய புராணப் புழுகல்களில் சிலர்
என பலப்
பலவீனர்கள்
கடந்துச்செல்ல ....


அவர்கள் தவிர்த்த ....
"ஐயோ பாவம் " எனும் சிலர்
"விதி வலியது " எனும் சிலர்
"அன்றொரு நாளும் இப்படித்தான் " எனும் சிலர்
"தினம் தினம் ஏன் இப்படி ?" எனும் சிலர்
"நீயும் கவனம் "என பெற்றவரை எச்சரிக்கும் சிலர்
"இது தான் கண்ணா வீதி விபத்து " எனத்
தம் பிள்ளைகளுக்கு வேடிக்கைக் காட்டும் சிலர்
கைவரிசை காட்டத் துடிக்கும் திருடர்ச் சிலர் ...
என
மனிதப் பிண்டங்கள்
சதைப் பண்டங்கள்
வேடிக்கை வீணர்கள்
வெறும்பேச்சு தீரர்கள்
மனிதாபிமான மரணத் தூதர்கள்
புடைச்சூழ ....

ஏக்கத்தில்
ஏமாற்றத்தில்
பெரு மூச்சு விட்டு
விழிகள் திறந்தபடி
கூட்டத்தை வெறித்தப்படி
சில நிமிடங்களில்
மரித்தேப் போனது

மனித உருவில் ......
மனிதம்......

எழுதியவர் : கீதமன் (16-Mar-14, 9:20 pm)
பார்வை : 88

மேலே