கனாக் காணும் காலம்

கல்லூரி செல்லும் பருவம்
கவலைகள் இல்லா உலகம்
கற்பனை வானில் மிதக்கும்
கதைகள் பேசிக் களிக்கும்...!!

நட்புகள் சேர்ந்தால் கலக்கும்
நடப்பில் கல்வியும் சிறக்கும்
நனவிலும் கனவுகள் காணும்
நல்லார் இடித்தால் நகைக்கும் ....!!

ஆடல் பாடல் கிண்டல்
ஆரவாரம் நித்தம் செய்யும்
ஆபத்து எவர்க்கேனும் வந்தால்
ஆதாய நோக்கின்றி உதவும் ....!!

குறும்புகள் செய்தே மகிழும்
குதுகலம் அதிலே விளையும்
குற்றங்கள் கண்டு கொதிக்கும்
குழாத்துடன் கூடிக் களையும் ...!!

துள்ளித் திரியும் கோலம்
துடிப்புடன் ஆடும் காலம்
துச்சமாய் எண்ணி விட்டால்
துவட்டித் தூக்கி எறியும் ...!!

நட்பில் புரிதல் அதிகம்
நட்பும் புனிதம் பேணும்
நட்புக்குத் தோள் கொடுக்கும்
நட்பையும் கற்பாய் மதிக்கும் ....!!

காதல் மெல்ல அரும்பும்
காந்தம் போலே கவரும்
காட்சியும் அழகாய் விரியும்
காவியம் அதிலே விளையும் ...!!

பட்டாம் பூச்சிகள் போலே
பறக்கும் சிறகுகள் விரித்து
புதுமைகள் புரியத் துடிக்கும்
புதுயுகம் படைக்க நினைக்கும் ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Mar-14, 10:05 pm)
பார்வை : 331

மேலே