முரண் வாழ்க்கை

தேன் துளியைத் தீண்ட நினைத்து
பனித் துளியைப் பருகுகிறேன் -
பனித் துளியைப் பருகி விட்டு
பசியோடு தவிக்கின்றேன் !

இமைகளை மூடிக்கொண்டு
ஓவியங்கள் தீட்டுகிறேன் -
ஓவியங்கள் தீட்டி விட்டு
அழித்து விட நினைக்கின்றேன்!

முதல் வரியே இல்லாமல்
கவிதைகளை எழுதுகிறேன் -
கவிதைகளை எழுதி விட்டு
காகிதத்தைக் கசக்குகிறேன் !

சிறகுகளை இழந்து விட்டு
வானத்தில் குதிக்கின்றேன்-
வானத்தில் குதிக்கும் போது
வலியோடு வீழ்கிறேன்!

கண்ணீரை வைத்தொரு
காவியத்தை எழுதுகிறேன் -
காகிதத்தில் எழுதி விட்டு
காய்ந்த பின்னே தவிக்கிறேன் !

எங்கெங்கோ அலைந்துவிட்டு
வீட்டுக்குள் போகிறேன் -
வீட்டுக்குள் போன பின்னே
காற்றுக்காய் தவிக்கிறேன் !

என் வாழ்க்கைப் பாதையினை
எழுத்துக் கூட்டிப் படிக்கிறேன் -
வார்த்தைகளின் இடைவெளியில்
மௌனமாய் அழுகிறேன் !

தீபமென நினைத்து விட்டு
தீயினைத் தீண்டுகிறேன் -
தீயினில் விழுந்து விட்டுத்
திரும்பி வர நினைக்கிறேன் !

பூக்களென நினைத்து விட்டு
இலை நுனியில் அமர்கிறேன் -
தேன் துளிதான் என நினைத்துப்
பனித்துளியைப் பருகுகிறேன் !

கதற வைக்கும் நிஜங்களை
கவிதையாக்க நினைக்கிறேன் -
மையினால் காகிதத்தில்
மௌனங்களை எழுதுகிறேன் !

கண்களை மூடிக்கொண்டு
கனவுகளில் சிரிக்கிறேன் -
கனவுகள் தீர்ந்த பின்னே
கண்விழித்து அழுகிறேன் !

மலர்களின் மேனியிலே
முத்தமிட நினைக்கிறேன் -
முட்களைக் கையிலேந்தி
முத்தங்கள் பதிக்கிறேன் !

காதலின் கீதமாய்
காற்றிலே கலக்கிறேன் -
கரைந்தழிந்து போனபின்னே
காதலியைத் தேடுகிறேன் !

எத்தனையோ உணர்வுகளை
எழுதி வைக்க நினைக்கிறேன் -
அத்தனையும் ஓவியமாய்
நெஞ்சுக்குள் கிறுக்குகிறேன் !

தென்றலின் வடிவத்தைத்
தப்பாக எழுதுகிறேன் -
பேனாவைத் தொலைத்து விட்டு
பிழைகளோடு தவிக்கிறேன் !

எழுதியவர் : மனோ & மனோ (19-Mar-14, 2:33 pm)
Tanglish : muran vaazhkkai
பார்வை : 80

மேலே