நெருப்பாய் எரியும் வாழ்வு!

கல்வியை விற்கிறான் கடையிலே!-இங்கு
கற்பவன் நிற்கிறான் படையிலே!
கழுதைகள் காவலன் உடையிலே!-மனம்
கண்டு துடிக்குதே இடையிலே…!

பேயர சாளுது நாட்டிலே!-இன்று
பேனையை போடுறார் கூட்டிலே!
கணவனும் மனைவியும் கோட்டிலே!கொண்ட
காதலால் வந்தது றோட்டிலே…!

நினைவுகள் காதலின் மடியிலே!-நிதம்
நிம்மதி தேடுறார் குடியிலே!
வாழ்வு நிலைப்பது படியிலே!-இன்றேல்
வாடிட வேண்டுநாம் அடியிலே!

அனைத்தையும் இழந்தார் அலையிலே!-இன்று
அகதியாய் நனைகிறார் மழையிலே!
வாழ்க்கை செலவுயர் மலையிலே!-இட்ட
வாக்கினால் வந்தெதம் தலையிலே!

சும்மா புகழுவார் பேச்சிலே!-கொடும்
சுயநல முள்ளது மூச்சிலே!
வாழ்க்கை எரியுது நெருப்பிலே!-உலகில்
வாழ்வது அவரவர் பொறுப்பிலே!!

2007.11.04

நன்றி.
*பதிவுகள்
*வார்ப்பு
*சுடர்ஒளி

எழுதியவர் : கவிஞர் அஸ்மின்(ஸ்ரீ லங்கா) (19-Feb-11, 8:00 pm)
சேர்த்தது : கவிஞர் அஸ்மின்
பார்வை : 531

மேலே