நவீன துச்சாதனனும் நாயான யூதாஸும்!
பாலாறு தேனாறு ஓடிநின்ற பூமி!
படுபாவிகளினாலே அழியுதடா சாமி!
யாழ்தன்னைப் பந்தாடத் துடிக்குதடா ‘ஆமி’!
யாரென்று உனைக்காட்ட ‘துவக்கெடுத்து காமி!
நாள்தோறும் நல்லவரை ‘கொட்டி'யென்றடைப்பார்
நடுறோட்டில் அவர்பின்னே பிணமாக கிடைப்பார்!
காலாற நடந்தாலே காணமல் போவோம்!
கண்ணிவெடி கிளைமோரில் கால்பறந்து சாவோம்!
கோளாறு கொண்டோரை கொன்றன்று வென்றோம்!
கோடாலிக் காம்புகளால் பின்வாங்கிச் சென்றோம்!
ஏழாறு நாள்போதும் மீண்டுமதை வெல்வோம்!
எமன்வந்து தடுத்தாலும் அவனையுமே கொல்வோம்!
பாவிகளின் இடுப்பொடிக்க ஒருபோதும் அஞ்சோம்!
பல்லிளித்து ஈழம்தா என்றும்நாம் கெஞ்சோம்!
ஆவிபறி போனாலும் மீண்டும்நாம் பிறப்போம்
அடிவருடி களையொழிக்க உயிருறவை துறப்போம்!
எம்மவனே எமையழிக்க யூதாஸாய் போனான்!
எச்சிலைக்காய் வாலாட்டும் நாய்போன்றே ஆனான்!
அம்மாவின் சேலையினை ‘துச்சாதன்' உரித்தான்!
ஆஹாகா! மேலுமுரி எனப்பிள்ளை சிரித்தான்!
ஐவிரலும் ஒன்றல்ல! அவன்பிள்ளை யல்ல!
ஐயையோ என்றலர்வான் எதிரிகளே கொல்ல!
பொய்யுலர பூமலரும் போரொருநாள் ஓயும்!
பொறுதமிழா! உன்வாழ்வில் இன்பத்தேன் பாயும்!
நன்றி.
*பதிவுகள்
*சுடர் ஒளி
*தாயகம்
*வார்ப்பு