அன்பு உள்ளங்களைத் தேடி
அன்பு உள்ளங்களைத் தேடி
சாமிநாதன் சென்னையில் பிறந்து வளர்ந்து பள்ளிக்கூடம் சென்று படிப்பை முடித்தபின் கல்லூரி படிப்பைத் தொடரும் வேளையில் எதிர்பாராமல் ஒரு ரயில் விபத்தில் பெற்றோரை இழக்க நேரிட்டது.இதனால் அம்மாவின் வழியில் உள்ள ஒரு உறவின் உதவியால் பம்பாயில் சென்று படிக்க நேரிட்டது. அங்கு கல்லூரியில் பட்டப் படிப்பையும் பின் விற்பனைக்கு வேண்டிய சிறப்பு படிப்பையும் படித்து
பம்பாய் நகரில் வேலை செய்து வந்தார்.விற்பனை பிரிவில் வேலையானதால் வெளியூர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல் ஏற்படும். இவ்வாறு அலைந்து திரிவதால் சாமிநாதனுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது சிறிது சிரமம் ஏற்பட்டது.
நண்பர்களும் கூட வேலை செய்பவர்களும் அவர்களுக்கு தெரிந்த குடும்பத்தில் பேசி ஒரு பெண்ணை சாமிநாதனுக்கு மணமுடிக்க முடிவு செய்ய சாமிநாதனும் அந்த பெண்ணிடம் பேசி தன்னுடைய வேலையைப் பற்றிக் கூறி மாதம் மூன்று வாரம் தான் வெளியூர் செல்வதைப் பற்றியும் இரண்டாண்டுக்கு ஒரு முறை ஊர் மாறுவதை பற்றியும் கூறி அதற்கு அவளுடைய சம்மதம் பெற்று பின்னர் திருமணம் செய்து கொண்டான்.
அந்த வருடம் செகந்திராபாத் நகரில் ஒரு புதிய அலுவலகம் ஆரம்பித்து அதை நடத்தும் பொறுப்பும் கிடைத்தது. அங்கு அலுவலகம் நன்றாக நடக்க வருமானமும் அதிகரிக்க மேலிடம் அவருக்கு பதவி உயர்வை அளித்தது. கேரளாவில் ஒரு அலுவலகம் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து சாமிநாதனை கூப்பிட்டு அவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தது தலைமை அலுவலகம். அவரும் உடனே அங்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்ய அவருடன் வேலை செய்த யாவரும் அவரை வழியனுப்பினார். கேரளாவில் எர்ணாகுளம் சிட்டியில் கிரிநகரில் ஒரு பெரிய வீடு எடுத்து அங்கே இருவரும் குடியேறினர். லதாவுக்கு கேரளா மிகவும் பிடித்திருந்தது. கேரள மக்களின் பழக்க வழக்கங்களும் சுத்தமாக தண்ணீர் அவர்களின் வேலையை செய்யும் பாங்கும் மற்றும் பல செயல்களும் அவளுக்கு அவர்களிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.அங்குள்ள கோவில்களும் அதில் சிரத்தையுடன் செய்யும் பூஜைகளும் வாத்திய கோஷங்களும் அங்குள்ள தெய்வவழிபாடுகளும் அவள் மனதைக் கவர்ந்து வாழ்க்கை முழுதும் இங்கேயே இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
சாமிநாதனுக்கு அலுவலக வேலையின் காரணமாக லதாவின் மனதையும் அவளது எண்ணங்களையும் அறியமுடியவில்லை. அவனது வேலையில் உள்ள சிக்கல் வேலையாட்களின் நேரத்தை கணக்கெடுத்து எல்லா செயலையும் பணத்தைக் கொண்டு அளக்கும் மனப்பாங்கு ஆகியவை கொடுத்த வருத்தங்கள் அவனைக் கேரளாவை வெறுக்க வைத்தது. அதை மனதில் கொண்டு அவன் குறை கூறினால் லதா உடனே தனது பங்கிற்கு கேரளாவில் இருந்தால் கிடைக்கும் பல நல்லவற்றை எடுத்து கூறுவாள்.இருவருக்கும் சில நேரங்களில் இதனால் வாக்குவாதம் நடக்கும். இவ்வாறு ஆண்டுகள் உருண்டோடின.கேரளா வந்த பின் பல நண்பர்கள் கிடைத்தனர் என்றாலும் சாமிநாதனுக்கு அங்குள்ள அலுவலகத்தில் வேலை செய்வது மகிழ்ச்சியளிக்கவில்லை.
சுவாமிநாதனுக்கும் லதாவிற்கும் திருமணமாகி பல வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் அங்கு உள்ள நண்பர்களின் அறிவுரையின்படி கோவில்கள் பலவற்றில் வேண்டுதல் செய்து கொண்டு குழந்தை பாக்கியத்தை அருள தெய்வத்தின் கருணையை எதிர்நோக்கி இருந்தனர். கடவுளின் கருணையால் லதாவுக்கு குழந்தை பாக்கியம் கிட்டிட, .சாமிநாதனுக்கும் லதாவிற்கும் ஏற்பட்ட மகிழ்ச்சியை அளவிட முடியாது.இருவரும் பேசி கேரளவிலேயே இருக்க முடிவுசெய்தனர்.சாமிநாதனும் அங்குள்ள வேலையாட்களின் மனநிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு அவர்கள் வேலையை பாராட்டி வேண்டிவற்றை செய்ததால் வருமானம் பெருகி அலுவலகம் நல்ல முறையில் இயங்கியது.
தலைமை செயலகம் சாமிநாதனை அங்கேயே இருக்க அனுமதித்தது.
குழந்தை பிறந்தவுடன் அதைப் பார்த்துக்கொள்ள ஒரு நல்ல வேலைக்காரியை நியமித்ததால் லதாவுக்கு சிறிது ஓய்வுகிடைத்தது. குழந்தையை வளர்க்க உதவியும் கிடைக்க அவள் நல்ல முறையில் பிறந்த குழந்தையை வளர்களானாள் குழந்தை ஆனந்த் துறுதுறுவென்று எங்கும் சுற்றி திரிந்து எல்லோரையும் தன் மழலையாலும் செய்யும் செய்கையாலும் கவர்ந்து ஆச்சரியமடையவைத்தது. சாமிநாதனும் லதாவும் இதனால் மிகப் பெருமிதம் அடைந்தனர். குழந்தை ஆனந்த் பள்ளி செல்லும் வயது வந்தவுடன் படிக்க செல்ல வீடே நிசப்த்தமாகி களை இழந்தது. வருடங்கள் மிக வேகமாக உருண்டோடியது. ஆனந்தனும் வளர்ந்து பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லும் நிலை வந்தது. அவனை சாமிநாதன் பொறியியல் படிக்க சொல்லி அங்குள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்த்தான். ஆனந்த் கல்லூரி தேர்வில் முதல் மாணவனாக வெற்றி பெற்றான்.இதை அறிந்தவுடன் சாமிநாதனுக்கும் லதாவிற்கும் அவனால் பெற்ற பெருமைகள் பன்மடங்காக பெருகியது.
அவன் ஒரு வேலையைத் தேடி கோவை நகரில் ஒரு புகழ் மிக்க அலுவலகத்தில் சேர்ந்தான். பெற்றோர்கள் அவனுக்கு திருமணம் நடத்த வேண்டி பல இடங்களில் பெண் பார்த்து ஒரு பெண்ணை முடிவில் தேர்ந்தெடுத்து திருமணத்தை விமர்சையாக நடத்தினர். மணமுடித்தவுடன் ஆனந்த் தனது துணைவியோடு கோவைக்கு பயணமானான். ஆனந்த் மனைவியுடன் கோவைக்குச் சென்றபின் அவர்கள் ஒரு வீட்டை வாங்கி அதில் குடியேறி வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வந்தனர்.சாமிநாதனும் லதாவும் கேரளாவில் உள்ள வீட்டில் தனியாக வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
சாமிநாதன் வெளியூர் செல்ல நேரும் பொழுதெல்லாம் லதா ஆனந்த் இல்லாததை நினைத்து மனவருத்தத்தோடு நாட்களை கழிப்பாள்.
சில வருடங்கள் சென்ற பின் ஒரு நற்செய்தி கடிதம் மூலம் வந்தது. அவர்களுக்கு பேரன் பிறந்தது பற்றிய செய்தி அதைப் படித்ததும் சாமிநாதனும் லதாவும் மகிழ்ச்சியின் உச்ச நிலையை அடைத்தனர். குழந்தை பிறந்தவுடன் சாமிநாதனும் லதாவும் உடனே சென்று பார்க்கலாம் என எண்ணி ஆனந்திடம் நாங்கள் அங்கு வரலாமா
ஏதாவது உதவி தேவையா என வினவ ஆனந்த் உடனே வேண்டாம் என கூறி மனைவியின் அம்மாவும் அப்பாவும் உள்ளனர் அதுவே போதும் என பதில் அனுப்பினான். லதாவுக்கு அதை பார்த்ததில் சிறிது மனவருத்தம் அதை சாமிநாதனிடம் கூறி வருந்தினாள். அவரும் நாம் அன்புடன் வளர்த்த பிள்ளை நம்மை அழைக்காமல் அவன் மனைவி வழி உறவுகளுடன் காலம் கழிப்பது சிறிது துக்கத்தை தருகிறது என்று அவளது மனஎண்ணத்தை ஆதரித்தான் . ஆனந்த் மனைவியை வீட்டிற்கு கூட்டிவந்த பிறகு பெற்றோர்களிடம் அதை பற்றிய தகவலை மட்டும் அனுப்பினான்.நாட்கள் மாதங்களாகி பின் வருடங்களாக மாறியது.இப்பொழுது பெரக்குழந்தை பேசவும் நடக்கவும் ஆரம்பித்து விட்டது எனச் செய்தி வந்தது.
சாமிநாதனும் லதாவும் தங்கள் வருத்தங்களை அவ்வப்பொழுது தெரிவித்து ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்தி கொண்டனர்.
ஆண்டுகள் பல சென்ற பின் ஆனந்தும் அவன் மனைவியும் பிள்ளை வளர்த்துவிட்டதாகவும் நீங்கள் தனியாக இருப்பதற்குப் பதில் எங்களுடன் வந்து தங்கலாமே எனக் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்கள். இதைக் கண்டதும் லதாவும் சாமிநாதனும் தங்கள் பிள்ளையுடனும் மருமகளுடனும் பேரனுடனும் காலம் கழிப்பதை எண்ணி மிக மகிழ்ச்சியுடன் அதை பற்றி பேசி கொண்டு தங்கள் நேரத்தை கழித்தனர். அந்த கடிதம் படித்ததும் சாமிநாதனும் லதாவும் ஆனந்த் குடும்பத்துடன் இருப்பதாக ஒரு முடிவெடுத்து அலுவலகத்தில் உள்ளவர்களிடம் தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறு கூறிவிட்டு மேல் அதிகாரிகளிடமும் தனது முடிவை பற்றி கூறியபின் வீட்டிற்கு வந்தான்.
காலையில் மகிழ்ச்சியோடு சுவாமிநாதனும் அவர் மனைவியும். தங்கள் பிள்ளையோடு சேர்ந்து வாழ்வதை பற்றியும் தங்கள் மீதி வாழ்க்கையை கழிக்க போவதையும் குறித்து திட்டமிட்டு கொண்டிருக்க .அன்று இரவு,சுவாமி "லதா நாளைக்கு நம்ம பிள்ளைகளோட சேர்ந்து இருக்கபோறோமுன்னு சொன்னதுமே அவங்க ரொம்ப சந்தோசம் படுவாங்க இல்லையா ?"என்றார். அதற்கு லதா "ஆமாங்க,ரொம்ப சந்தோஷ படுவாங்க..." என்றாள். நம்ம பையன் ஆனந்த்துக்கு அரிசி முறுக்கும் அதிரசமும் பிடிக்கும்,அதை ரெடி பண்ணியாச்சா "லதா உடனே அதெல்லாம் இன்னைக்கு காலைலேயே ரெடி பண்ணி பேக் பண்ணிட்டேன்..
" மருமகள் விமலாக்கு லட்டு புடிக்குமே,அதுவும் பண்ணிவிட்டாயா ?"
"எனக்கு தெரியாதா,எல்லாம் ரெடியா எடுத்துதான் வச்சிருக்கேன்..".
சாமிநாதன் இதை கேட்டதும் நிறைய வேலை செய்திருக்கே முதலில் நல்லா தூங்கு, அதிகாலைலே பஸ் ஏறினாத்தான் சீக்கிரமா கோவை போய் சேர முடியும்."
"சரிங்க... நீங்களும் ரொம்ப நேரம் முழிச்சுகிட்டு இருக்காமே நல்லா தூங்குங்க...."என்றாள் லதா.
மறுநாள் மகன் ஆனந்த் வீட்டில்,அழைப்பு மணி அடித்தவுடன் விமலா கதவை திறந்து "வாங்க அத்தை,வாங்க மாமா,என்று புன்னகையுடன் வரவேற்க உள்ளே அடி எடுத்து வைத்ததும் விமலா .உங்கள் வருகையை எதிர்பார்த்து குழந்தை ராஜேஷ் கேட்டுக்கொண்டே இருக்கான் எனக் கூற "லதா உடனே இதோ ஓடி வந்துட்டுமே எங்க செல்லப் இல்லம்மா, இதோ ஓடி வந்துட்டுமே எங்க செல்ல பேரனைப் பார்க்க...". என்று தன் பேரனை அள்ளி முத்தமிட்டாள் ..
"லதா குழந்தையை பார்த்து இங்க பாரு, பாட்டி உனக்கு என்னென்ன கொண்டு வந்துருகேன்னு..." என்று தான் கொண்டு வந்ததை காட்டினாள் "எதுக்கு அத்தை இதெல்லாம்... இங்க தான் நிறைய ஸ்வீட்ஸ் கடை இருக்கே...".
"இருக்கட்டும்மா, என்ன இருந்தாலும் நம்ம செய்யுற மாதிரி வருமா என்று தன்னிடம் ஓடி வந்த பேரன் ராஜேஷை மடியில் அமர்த்தி சிறிது அதிரசத்தையும் லட்டுவையும் ஊட்டினாள் லதா.
"நீங்க வந்து நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க, அப்புறமா எல்லாம் பேசிக்கலாம் அத்தை என்று விமலா கூறினாள் ."
அன்று இரவு ஆனந்தும் விமலாவும் அவர்கள் அறையில்,
"ஏங்க, உங்க அம்மாவும் அப்பாவும் இனி இங்கேயே தங்கற முடிவிலே வந்திருக்காங்க போல இருக்கே என சொல்ல "
"ஏன் விமலா அப்படி சொல்ற, கொஞ்ச நாள் இருந்துட்டு போட்டுமே. என்றான் ஆனந்த் ".
" இங்க பாருங்க, இந்த உணர்ச்சிக்கெல்லாம் இடம் கொடுக்காது முதலில் நமக்கு வர வேண்டிய உங்க அப்பா அம்மாவோட வீடு மற்றும் நிலபுலன்களை நம்ம பேருக்கு மாத்திஎழுத வைக்கிற வழியைப் பாருங்க.. அந்த வீடும் நிலமும் நல்ல விலைக்கு போகும் என்று எங்க அப்பா சொல்லறாரு என சிறிது உரக்கக் கூறினாள். ஆனந்த் உடனே
"சரி சரி, காலையில் இதற்கான பேச்சை அப்பாகிட்ட ஆரம்பிக்கிறேன் எனச் சொன்னான் .
இதை வெளியில் இருந்து காதில் கேட்ட சுவாமிநாதனும் லதாவும் மெதுவாக எழுந்து வீட்டு வாசலில் வந்து அமர்ந்து ஆனந்த் பேசியதைப் பற்றி யோசிக்கலானார்கள்.
"ஏங்க, நம்ம இங்க இவங்க கூட இருக்கத் தானே வந்தோம். ஆனா இப்பவே இவங்க நம்ம வீட்டையும் நிலத்தையும் விக்க பாக்குறாங்களே." என்று ஆதங்கப்பட்டாள்.
"கொஞ்ச பொறுமையாக இரு லதா, நம்ம வீடும் நிலமும் நமக்கு அப்புறம் நம்ம மகனுக்கோ பேரனுக்குக்கோ தானே கிடைக்கணும் ஆனா இப்பவே எழுதி வைக்க முடியாது. என்ன பண்ணலாம்,,." என்று தான் மனதில் எண்ணிய திட்டத்தை லதாவிடம் கூறினார். மறுநாள் காலை எழுந்தவுடன் காப்பி எடுத்துக்கொண்டு வந்த விமலா ஆனந்துக்கு சாடை காட்ட, ஆனந்த் சிரித்த முகத்தோடு தன் பெற்றோர்கள் முன் அமர்ந்தான்.
அவன் பேச ஆரம்பிப்பதுற்குள்,சுவாமிநாதன் ஆனந்த் நாங்க இன்னைக்கே ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம்.அப்புறம் உன்கிட்டே முக்கியமான விஷயம் சொல்லணும் ஒரு ஆதரவு அற்ற குழந்தையைத் தத்து எடுக்கலாம்னு இருக்கோம்.ஏன்னா இப்ப நாங்க தனியா இருக்கோம்.எங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா பார்த்துக்க,அப்புறம் எங்க கூட நேரத்தைச் செலவிட ஒருத்தரும் இல்லை அதனால் தான் இந்த எண்ணம் வந்தது எனக்கூற ...."ஆனந்த் உடனே அப்பா ஏன் அப்படி சொல்றீங்க, நாங்க இருக்கோமே .." என்றான். இருக்கீங்க ஆனா நாங்க தனிமையா இருக்கிறதா தான் உணருகிறோம் . அப்புறம் நம்ம வீடு நிலம் எல்லாத்தையும் எங்களுக்கு பிறகு எங்களோட இருந்து பார்த்துக்குற அந்த பையனுக்கு கல்யாணப் பரிசா குடுக்க உங்க அம்மாவும் நானும் முடிவு பண்ணிருக்கோம்..."என்றார்.. இதை கேட்டதுதான் தாமதம், விமலா உடனே திடுக்கிட்டு "ஏன் அத்தை நாங்க உங்களைப் பார்த்துக்க மாட்டோமா? தேவை இல்லாம ஏன் வீட்டை ஒரு அநாதை பையனுக்கு எழுதி வைக்கணும் ?" என்றாள். லதா உடனே
"இல்லைம்மா எங்களால இந்த சுற்று சூழலுக்கு ஒத்து போக முடியுமுன்னு தோன்றவில்லை ?,உங்களாலேயும் அந்த பழைய இடத்திலே போய் இருக்க முடியாது?மேலும் உங்களுக்கு எங்களை விட எங்களின் சொத்து தான் முக்கியமாகப் படும் பொழுது " என்று சொல்லி முடித்தாள்.
இதை கேட்டவுடன் ஆனந்த் விமலா இருவருக்கும் என்ன
பேசுவதென்று தெரியாமல் மௌனமாக நிற்க அவர்களிடம் தாங்கள் கிளம்புவதாக கூறி சாமிநாதனும் லதாவும் கிளம்பி விட்டனர்.
"ஏங்க,நம்ம புறப்பட்டு வந்துட்டோமே,அங்கேயே இருக்கத்தானே முடிவு பண்ணி போனோம்?"என்றாள் லதா.
"ஆமா,இப்ப இவங்க கூட இருந்தா இவங்க நம்ம
சொத்தைப் பறிச்சுட்டு நம்மையும் ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்க்க மாட்டாங்க என்பது என்ன நிச்சயம்?இப்ப நமக்கு தேவை நம்ம மேல அன்பு காட்டவும் நாம் அவங்க மேலே அன்பு காட்டவும் நம்மிடம் உள்ளதை பற்றி அறியாது நேசிக்கும் பிள்ளை.
"நம்ம வீட்டுக்கு பக்கத்துல உள்ள குழந்தைகள் காப்பகம்
அங்கே போவோம்.நம்மை போலத்தானே அந்த குழந்தைகளும் அன்புக்கு ஏங்கும்,இனி நம்மால் முடிஞ்ச உதவியை அவர்களுக்கு செய்வோம்,அப்புறம் நிறைய முதியோர் இல்லங்கள் இருக்கு,அங்க நாம் இந்த குழந்தைகளைக் கூட்டிப்போய் அவர்களை மகிழ வைப்போம். "நம்ம பேரனைப் பார்த்துக்க அவனுடைய பெற்றோர் இருக்காங்க.ஆனா நம்மள மாதிரி அன்புக்கு ஏங்குற குழந்தைகளையும் வயசானவர்களையும் பார்த்துக்க யார் இருக்கா? நம்மளால முடிந்த உதவிகள் செய்வோம்.என்ன நான் சொல்றது?" என்ற கணவனின் பக்குவப்பட்ட வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்து சரி என்று தலையசைத்து அவர் தோளில் சாய்ந்தாள்....."
பேருந்தும் அவர்கள் மனமும் புறப்பட்டது ஆதரவற்ற அன்பு உள்ளங்களை தேடி.
...