புதைந்த அந்த நாட்கள்
நினைத்து பாற்கின்றேன் நெஞ்சினில் சங்கமமாகிய அந்த நாட்களையும்
புதைந்த அந்த நிகழ்வுகளையும் கண்ணீரோடு திரும்பிப் பாற்கின்றேன்
அண்ணன் தம்பி தங்கையின் உணர்வுப்பூர்வமான தருணங்களையும்
பழகிய அழகிய நினைவுகளையும் மனதில் கோர்த்துக்கொண்டிருக்கிறேன்
கூடப் பிறந்தவர்களுடன் போட்ட நெகிழ்வான சண்டைகள்
மண் குடிசையில் விளக்கு வெளிச்சத்தில் உரையாடிய இரவுகள்
அதிகாலையில் கூவி எழுப்பும் சேவலின் கொக்கரக்கோ
பசுக்களின் அம்மாவென்ற அன்புக் கூக்குரலின் ஓசைகள்
இனிக்கத்தான் செய்கிறது அந்த நாட்கள் மட்டுமே
மண்ணடுப்பில் மண்சட்டி ஏற்றி
தென்னை மட்டை, விறகெரித்து வதக்கியெடுத்த மீன்குழம்பு
காலையில் புளித்த சுவையுடன் நுரை தள்ளிய பழைய சோறு
அமிர்தமாய் இன்னுமென் நினைவுகளிலே இனிக்கிறதே