உழவு போற்று - கே-எஸ்-கலை

மலைமுகட்டில் பனியிறங்கும் வேளை - கிழக்கில்
தலை துவட்டிப் பரிதிவரும் காலை -
முகிலெடுத்து முகம்துடைக்கும் சோலை - உழவன்
முனைப்போடு தொடங்கிடுவான் வேலை !

கோவணத்தைக் கட்டிக்கொண்ட உழவன்- வயது
ஏழுபத்து தாண்டிவிட்ட கிழவன் !
ஆவணமாய் வயல் எழுதும் மறவன் - அவனே
அண்டமகிலம் அத்தனைக்கும் அரசன் !

உடல்முழுதும் பூசி நிற்பான் சேறு-அவன்
உள்ளத்திலே இருப்பதில்லை ஊறு !
சளைக்காமல் ஓட்டிடுவான் ஏரு - ஊருக்கு
களைக்காமல் ஊட்டிடுவான் சோறு !

கடலாக திரண்டோடும் வேர்வை- அவன்
கண்டதில்லை ஒருபோதும் சோர்வை !
வறுமையவன் போர்த்திக் கொள்ளும் போர்வை
அதை- கிழித்தெறிய அரசிற்கில்லை பார்வை !
===
பச்சைசேலை கட்டிக் கொண்ட பூமி -அதில்
பாடுபடும் மனிதன் தானே சாமி ?
உழவனுக்கு இணையிங்கு ஏது - அவனை
போற்றஒரு வார்த்தைக் கிடை யாது !

எழுதியவர் : கே.எஸ்.கலை (22-Mar-14, 9:18 am)
பார்வை : 367

மேலே