உனக்கு பாட்டு ஒரு கேடா - மணியன்
நாட்டுக்குள்ள என்னப்பத்தி
நினைக்கவொரு நாதியில்ல. . .
நாளுகிழமை நானுமாத்தி
நனைக்கவொரு துணியுமில்ல. . . .
அலைஞ்சு திரிஞ்சு உழைச்சும் பார்த்தேன்
அரை வயிறு நிரம்பவில்ல. . . .
கூட்டிக் கழிச்சும் கணக்குப் பார்த்தும்
குரவளைக்கேச் சோறு இல்ல. . . .
உண்ட களைப்புத் தீர எனக்கு
உறங்க ஒரு திண்ணை இல்ல. . . .
கண்ட கனவு நினைச்சுப் பார்த்தா
காலை வரைத் தூக்கம் தொல்லை. . .
கொசு பிடிக்க வலையும் இல்ல
கோலம் போடத் தரையும் இல்ல
கோமாளிகள் ராஜ்ஜியத்தில்
கோவணமும் கொடி ஆகுமுல்ல. . . .
நேத்து வரை நடந்த தெல்லாம்
நினைச்சுப் பாக்க நேரம் இல்ல. .
நெட்டி முறிச்சு கொட்டாவி விட
கொடுப்பினையும் எனக்கு இல்ல. . . .
படைச்சுப் புட்ட ஆண்டவனே
கிடையினிலே ஆட்டைப் போல . . .
நடக்கிறத நடக்க விட்டா
கிடைக்கிறது ஒண்ணும் இல்ல. . . .
வயிறு சுருங்கி படுத்துக் கிடக்கான்
வறுமையால எங்க புள்ள. . . .
வந்தவனும் வரப் போறவனும்
சிந்தையிலும் எண்ணப் போறதில்ல. . . .
சொரணை கெட்டுப் படுத்துக் கிடக்கோம்
சுருண்ட பாயோட தரையில. . . .
வருணம் மும்மாரி பெய்ஞ்சு
வரணும் இடத்தேர்தல் போல. . . .
வக்கனையாச் சொல்லிப் புட்டேன்
வள வளன்னு பாட்டுல. . .
வந்த அசதி போக்க இன்னும்
வாங்கவில்ல டாஸ்மாக்குல. . . . . . .
*-*-*-*-*-* *-*-*-*-* *-*-**-*