சொர்க்கம் எங்கே அத்தியாயம் - 5

மறுநாள் ..

காலை சுமார் ஒன்பது மணியளவில் யம கிங்கரர்கள் இருவரும் யமதர்மனின் கோட்டை வாயிலை அடைந்தனர்.

அங்கு எங்கு பார்த்தாலும் கிங்கரர்கள் கொணர்ந்து வந்த உயிர்களை சுமந்து நின்றுகொண்டிருந்தனர். பெண் கிங்கரர்களும் இருந்தார்கள். ஓஹோ .. ஆணுயிர் கொணர்வார் ஆண்கிங்கரர்கள். பெண்னுயிர் கொணர்வார் பெண்கிங்கரர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

கங்கை நதிபோல், யமுனை நதிபோல், காவிரி நதிபோல், நைல் நதிபோல் கியூ நீண்டிருந்தது.

கிங்கரர்களே ! இது என்ன .. எத்தனை வரிசைகள் ? இந்திய நாட்டின் தென்மாவாட்டங்களில் ரஜனிகாத் போன்ற திரைப்பட நடிகர்கள் நடித்து திரையிடப்படும் திரையரங்குகளில் காத்திருக்கும் மக்கம் கூட்டம் போல் ? இவ்ளோ பெரிய கியூ ? இத்தனை உயிர்களா தினம் தினம் பூமியில் செத்து மடிகின்றன ? நான் ஏதோ யமகிங்கரர்கள் இரண்டு பேர்கள் தான் என்று நினைத்திருந்தேன். ஆனால் லட்சம் லட்சமாக கிங்கரர்கள் இருக்கிறார்களே ! ஒவ்வொரு உயிரும் வரிசையில் நின்று தான் உள்ளே நுழைய வேண்டுமென்றால் வெகு நாட்கள் ஆகுமே ? பூலோகத்தில், குறிப்பாக இந்தியாவில் இருப்பது போல், மேலுலகிலும் ஓரறிவு ஜீவனிலிருந்து ஆறறிவு படைத்த மனிதரில், ஜாதி, பேத மதங்களுக்குத் தகுந்தபடி, இடஒதுக்கீடு ஏதேனும் உண்டா ? கிங்கரர்களை யார், எப்படி பணி நியமனம் செய்கிறார்கள் ? இங்கு ஏதாவது எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உள்ளதா ? பூலோகத்தில் பட்டதாரிகள் பலர் வேலை தேடி தெருத்தெருவாக சுற்றி அலைகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தால் போதும் .. மிகவும் மகிழ்ந்துவிடுவார்கள்.

மானிடனே ! இதுவரை சிறிய சிறிய கேள்விகள் கொடுத்து வந்தாய். பதிலளித்தோம். இத்தனை பெரிய கேள்வியா .. இது என்ன .. "டைம்ஸ் நவ்" இங்கிலீஷ் நியூஸ் சேனலில் "அர்னப் கோஸ்வாமி" கேட்பது போல் இருக்கிறதே !

ஆஹா .. யமகிங்கரர்களும் பிரைம் டைம் செய்திகள் கேட்பதுண்டு போல் தெரிகிறதே !

நாங்கள் விரும்பிக் கேட்பதில்லை. சிலசமயம் உயிர்களை கொணர்ந்திட சற்று நேரம் முன்பாகவே சென்று விடுவோம். அப்பொழுது சரியான வேளைக்குக் காத்திருப்போம். அர்னப் கோஸ்வாமி போடும் கூச்சலிற்கிடையில் நாங்கள் உயிர்களை பறித்து விடுவோம். அப்பொழுது தான் தொலைக்காட்சியில் ஹைடெசிபலில் அந்த நியூசைப் பார்த்ததினால் தான் அவர் இறந்து விட்டார் என்று மற்றவர்கள் நினைப்பார்கள். எப்படி எங்கள் யுக்தி ? எங்களை உனக்குப் பாராட்டத் தோன்றவில்லையா ?

சபாஷ் ! கிங்கரகளே !! நான் ஏதோ சில அரசியல்வாதிகளும் மற்றும் கொஞ்சம் பொதுமக்களும் தான் அவர் சேனலை பார்ப்பார்கள், செய்திகள் கேட்பார்கள் என்று இதுகாறும் நினைத்திருந்தேன். அவர் புகழ் விண்ணுலகம் வரை எட்டிவிட்டதென்றால் .. பலே .. பலே .. அர்னப் கெட்டிக்காரன்தான். உங்களையும் அவருடன் சேர்ந்து பாராட்டுகிறேன். பலே .. பலே ..

மானிடா ! அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு விட்டாய். அதற்கெல்லாம் பதிலளிக்க தேவையான நேரம் தர வேண்டும். இல்லையென்றால் உன் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்க முடியாது. என்ன சொல்கிறாய் ?

மன்னிக்கவும் கிங்கரர்களே ! நான் பொறுத்திருக்கிறேன். நீங்கள் பதிலளியுங்கள்.

ம்ம் ! கேள்.
தினம் தினம் பூலோகத்தில் ஓரறிவு ஜீவனிலிருந்து ஆறறிவு ஜீவன்கள் கோடிக்கணக்கில் மடிகின்றன. அத்தனை உயிர்களையும் இங்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கென்று நியமிக்கப்பட்டவர்கள் தாம் கிங்கரர்கள். இங்கு உன்புலன்களுக்குத் தென்படும் வரிசைகள் எல்லாம் உயிரினம் வாரியாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஓரறிவு ஜீவன்களுக்கென்றும் , ஈரறிவு ஜீவன்களுக்கென்றும், ஆறறிவு ஜீவன்கள் வரைக்கும் தனித்தனியாக வரிசைகள் இருப்பினும், அவை ஜாதி, மத, மொழி வேறுபாடின்றி அமைந்தவை. பின் ஏன் இத்தனை வரிசைகள் என்று உனக்கு உடனே கேட்கத் தோன்றியிருக்குமே .. என்று சொல்லி நிறுத்தவும்,

ஆம் .. கேட்கத்தோன்றியது .. உண்மைதான்.என்று பதில் கூறவும், யமகிங்கரன் தொடர்ந்து,

நன்று ! உனக்கு விளங்கும் வகையில் இதைக் கூறுகிறேன். கவனமாகக் கேள். நீ பிறந்தது தமிழ்நாட்டில் என்று சொல்லவும் குறுக்கிட்டு,

இல்லை .. நான் பிறந்தது .. தமிழகத்தில் உள்ள, திருநெல்வேலி ஜில்லாவின் எல்லைக்குட்பட்ட, தென்காசி தாலுகாவில் அம்மன் சன்னதித் தெருவில் இருந்த என் தாத்தா சுயமாக சம்பாத்தித்து, அவர் மறைவிற்குப்பின் என் பாட்டி என் தகப்பனார் பெயரில் சட்டப்படி எழுதிக்கொடுத்த இல்லத்தில் பிறந்தேன்.

பார்த்தாயா .. குறுக்கிட வேண்டாமென்று கூறியிருந்தும், குறுக்கிட்டு விட்டாயே ..

தப்பு .. தப்பு .. பிழை பொறுத்தருளும் .. கிங்கரர்களே !

சரி .. சரி .. கேள். என்று சொல்லி கிங்கரன் தொடர்ந்தான்.

எழுதியவர் : (25-Mar-14, 9:34 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 140

மேலே