ஓர் எழுத்தாளனின் கதை-13
காவியா பேசிய பிறகு தினகரன் மீண்டும் ஓலிவாங்கி முன்பு நின்று அந்த கவிதைக்கான தெளிவுரையாக நீண்ட விளக்கமாக பேசுகிறான். அதில் பிரதமரையும், மத்திய அரசின் துரோகத்தையும் பற்றி கவிதையில் சொல்ல முடியாத காரச்சாரமான விஷயங்களை ஆவேசமாக எடுத்துரைத்து கொண்டிருக்க,
காவல் துறையினர்க்கு ஓர் அவசர உத்தரவு வருகிறது. ””போராட்டத்தை உடனே தடை செய்யுங்கள்! , மேலிடத்தின் கட்டளை ! ””
மாணவ அமைப்பின் தலைவரை காவல் துறை உயர் அதிகாரி அழைத்து “ போராட்டம் அப்படீன்னு பர்மிஷன் வாங்கிட்டு இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க.? உடனே எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிடுங்க. தேவையில்லாத இஸ்யூஸ் பேசுவது சரியல்ல. ஸ்டூண்ட்ஸ்னால வார்ன் பண்றேன். “
“ சாரி சார்.. இது எங்க உணர்ச்சி, அதுவும் அந்த பொண்ணு இப்படி கவிதை படிப்பான்னு நான் கூட எதிர்பார்க்கல. ஆனா சொன்னதில்லயும் தப்பா தெரியல. நீங்க அந்த பொண்ணுகிட்டயும். கவித எழுதிய அந்த தினகரன்கிட்டயும் பேசிக்கோங்க. 4 மணி வரைக்கும் பர்மிஷன் கொடுத்து இருக்கீங்க இப்போ 3 மணி தான் ஆகுது. “
பின்பு தினகரன் - காவியா இருவரையும் போலீசார் விசாரித்தனர். தினகரனிடம் ஒரு அதிகாரி..
”தம்பி.. நீ எழுதினதும் அந்த பொண்ணு பேசியதும் சரியல்ல, வன்முறை தூண்டக்கூடிய பேச்சு, ரூல்ஸ்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உன்னை உள்ள தள்ள முடியும் “
குறுக்கிட்ட காவியா “ எதுசார் தப்பு..? எங்க உணர்வை பேசுறோம்..? எங்க இனம் பற்றி நாங்க ஹைலைட் பண்ணி பேசுவது தப்பா? “
“ லுக் .. நீ பேசினது தப்பா..? சரியா? ஆர்கியூமெண்ட் பண்ண நான் வரல. நீ பேசியதில இந்திய இறையாண்மை எதிர்ப்பு, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிச்சு பேசியது என எல்லாமே கவர்மெண்ட்க்கு எதிரா இருக்கு, சோ நீ பேசினதை தொடர்ந்து மத்தவங்களும் இதே கருத்தை பேசினா கொந்தளிப்பு ஆகும். இப்போவே பாரு எப்படி ரியாக்ஷன் இருக்குன்னு..”
குறுக்கிட்ட தினகரன்...
“ சார்... எதுவாக இருந்தாலும் அது தப்பா தெரியல... இந்த கூட்டத்தில உங்களுக்கு சரியான காரணம் சொல்ல முடியாது. முடிஞ்சா கேஸ் போட்டுக்கங்க “ இளம் இரத்தத்தின் வேகத்தில் சட்டத்தின் மறுமுகத்தை அறியாமல் தினகரன் ஆக்ரோஷப்பட, அதனை பார்த்த மற்ற மாணவர்களும் அதே வேகத்தில் கொந்தளிக்க அங்கு சூழ்நிலை மாற்றத்தில் அனல் ஏறியது.
கூச்சல், குழப்பம் என்று அமளியான அந்த நேரத்தில் , சில குறும்புக்கார மாணவர்கள் கல்லை எடுத்து காவல் துறை வாகனம் மீது வீச, இதை பயன்படுத்திக்கொண்ட சமூக விஷமிகள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பிக்க, இதை கண்ட காவல் துறையினர் ஆத்திரப்பட....
அங்கே போர்கள காட்சிகள் அரங்கேறின.
மாணவர்களை அடித்து விரட்ட உத்தரவுகள் வந்தன. போலீஸ் லத்திகள் தனது முரட்டு குணத்தை காட்ட ஆரம்பித்தன, பல மாணவர்களின் தொடை, முதுகுகள் பலத்த அடியில் பழுத்துப்போக ஆரம்பித்தன. பல மாணவர்கள் போலீஸ் அடியில் இருந்து தப்பிக்க மிரண்டு ஓடி ஒளிந்துக்கொண்டனர்.
ஆனாலும் சில மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை விட்டு பாதியில் வெளியேற மாட்டோம் என்று பிடிவாதம் செய்தனர். அதில் காவியா- தினகரனும் இருந்தனர்.
இதுனால் கொதிப்படைந்த போலீசார் “ ஒழங்கா இந்த இடத்தை விட்டு போகலைன்னா நடப்பது விபரீதமா இருக்கும் “ என்று எச்சரிக்க..
“ சார் முடியாது..! போராட்டம் நடத்த வந்தோம். அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவச்சோம்.அவ்வளவுதான் அதுக்கு ஏன் இப்படி எங்களை மாடு அடிக்கிற மாதிரி அடிக்கிறீங்க. இதுக்கு கலெக்டர் வந்து மன்னிப்பு கேட்க வரை போகமாட்டோம் “ தினகரன் மிக உறுதியாக போலீசாருக்கு பதிலளித்தான்.
புகை கக்கும் வாகனத்திலிருந்து புகை வெளியேற்றி கூட்டத்தை கலைக்க வேண்டும் என்று மேலதிகாரியின் உத்தரவு வந்தது. இருந்தாலும் மாணவர் நலன் கருதி போராட்ட களத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர்... “ தம்பி லாஸ்ட் வார்னிங் , கலைஞ்சு போங்க...இல்ல ஸ்மோக் ட்ரீட்மெண்ட் பண்ண வேண்டியதா இருக்கும்.” எச்சரித்து சில நிமிடம் அவகாசம் தருகிறார்.
கோபம்,ஆத்திரம், ஆவேசம்,கொந்தளிப்பு என அனல் தெறிக்கும் உணர்ச்சிகளில் நிலை தடுமாறிய தினகரன், காவியாவை தன் கைகளால் இறுகப்பிடித்து கொண்டான். இந்த களேபரத்தில் அவளுக்கு எதுவும் அடிப்பட்டுவிடக்கூடாது என்ற கவனம் அவன் கண்ணில் தெரிந்தது. செய்தறியாமல் காவியாவும் அதீத பயத்தில் நெஞ்சம் படப்படக்க தினகரனுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று அக்கறைப்பட்டாள்.
தினகரனின் சக மாணவன் ஒருவன்.. “ டேய் தினா.. நீ எழுதிய கவிதைனாலதான் இவ்வளவு பிரச்சினை, வந்தோமா, ஏதோ கண்டனம் தெரிவிச்சோமான்னு போகாம .. ஏண்டா இப்படி பண்ணின... உன் கவிதைக்கு விளம்பரம் தேட தமிழ் உணர்ச்சி தான் கிடைச்சுதா? “ என்று தினகரனை பொறிந்து தள்ளினான்.
இதை கேட்ட காவியா “ அடத்தூ உனக்கு இவ்வளவுதானா புத்தி.. ரொம்ப சீப்பா பிகேவ் பண்றா. ஒரு நல்ல எழுத்தாளன் எழுதுகோல் கையில எடுத்துட்டா , அது புரட்சியை உண்டாக்கவே இருக்கும் , விளம்பரம் தேடனும்ன்னா எங்களுக்கு வேற வழி இருக்கு. இப்படி கலவரம் நடக்கும்ன்னு நாங்க ஆசைப்பட்டா எழுதினோம். உன்னை மாதிரி துரோக தமிழர்கள் இருப்பதுனால தான் அவனவன் அடிக்கிறான். பிரச்சினைன்னு வந்துட்டா விட்டுட்டு ஓடப்பாக்கிறீங்க, அப்புறம் நிலைமை சரி ஆச்சுன்னா தமிழன், தமிழ் அப்படி இப்படின்னு சொல்லி பெரிய மயிர் மாதிரி வாய் கிழிய பேசுவீங்க.... அடச்சீ போ நாயே.. யாரை பார்த்து விளம்பரத்திற்கு எழுதினேன்னு சொல்ற “ என்று காவியா ஆவேசத்தின் உச்சத்தில் கத்திக்கொண்டிருப்பதை பார்த்த ஒரு காவல் துறை அதிகாரி..
” ஏம்மா... உன்னாலதானே இப்படி ஆச்சு. ஒழங்கா இருக்கமாட்டீங்களா ? ”
“ சார்.. ஒழங்கா கவர்மெண்ட் இருந்திருந்தா நாங்களும் ஒழங்கா இருந்திருப்போம்.. கவர்மெண்ட் சம்பளம் வாங்கிட்டு சும்மா இப்படி கத்திட்டு இருக்காமா எங்க உணர்ச்சிக்கு கொஞ்சம் ரெஸ்பான்ஸ் கொடுங்க சார். நாங்க என்ன கொலை செய்யவா சொல்றோம் , மீனவர்களை கொலை செஞ்சவங்களை கண்டிக்க கேட்கிறோம். உங்கள மாதிரி லஞ்சம் வாங்கிட்டு 2 அடிக்கு தொப்பை வளர்த்திட்டு இந்த நாட்டை கொள்ளையடிக்கிற பொறுக்கிங்க நாங்க இல்ல “ என கிண்டலாக காவியா பதில் சொல்ல , அந்த அதிகாரி அதை மரியாதை குறைவாக எடுத்துக்கொண்டார். ஆத்திரத்தில் காவியாவை ஓங்கி கன்னத்தில் அடித்தேவிட்டார்.. இதைக்கண்ட தினகரன் ஆவேசத்தின் உச்சத்தில் அந்த காவல் அதிகாரியின் சட்டையை பிடித்து எச்சிலை துப்பினான்.
” பதில் சொல்ல தெரியாம, ஒரு பொண்ணுகிட்ட உன் பலத்தை காட்டுறீயே... நீ எல்லாம் ஒரு போலீஸ் அடச்சீ பொறுக்கி நாய்களே, லஞ்ச எலும்புத்துண்டுல உடம்பு வளர்த்துட்டு எங்கிட்ட வீரத்தை காட்டுறீங்க.. வெட்கமா இல்ல.. ......................................” தினகரன் அதீத கோபத்தில் என்ன என்னவோ பேச, போலீசாரின் கொடூர கண்கள் தினகரன் - காவியாவை குறிப்பார்த்து குறித்து வைத்துவிட்டன.
தினகரன் அல்லது காவியா இருவரில் ஒருவரின் வாழ்வு திருப்புமுனையாக அமையப்போகும் அந்த நிமிடங்கள் வந்துக்கொண்டிருக்கிறது.
(தொடரும்)