சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம் 11

சொர்க்கம் எங்கே ? தொடர்

அத்தியாயம் .. 11

11.

கிங்கரர்களே ! நேற்று அதல லோகத்தைப் பற்றிச் சொல்லிவிட்டீர்கள். இன்று விதல லோகத்தை பற்றியா ?

ஆம். மானுடா !

அரக்கர்களும், பொன்னாசை கொண்டு இறப்பவர்கள் மறுபிறவியில் விதல லோகத்தில் பிறப்பார்கள். சிவபெருமானின் அம்சமான கடவுள் “ஹர பவ” என்பவர் சிவ கணங்களுடன் ஆட்சி செய்யும் உலகம் இது. இங்கு அவர் மனைவி பவானியுடன் உறவு கொண்டு மகிழ்கிறார். அவ்வுறவால் ஏற்படும் பாலின நீர் பெருகி ஓடும் ஹடகி என்னும் ஆற்றுநீரை, வீசும் வெப்பக்காற்று பருகி ஹடக என்னும் தங்கமாக உமிழ்கிறது. அதனால் உண்டாகிய தங்கச்சுரங்கங்களை பேய்கள் பாதுகாக்கின்றன. இவ்வுலகில் வாழ்பவர்கள் தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டிருப்பார்கள்.

பொன் பொருள் நிஜம் என்று பூமியிலே வளர்ந்து பொய்யை மெய் என்று நம்பி விட்டேன் .. உன் மலர் பாதாரம் மறந்துவிட்டேன் ஐயா இன்று நான் உணர்ந்துகொண்டேன் என்ற பட்டினத்தார் பாடல் நினைவிற்கு வருகிறது.

மண்ணாசை கொண்டவர்கள் மறுபிறவியில் சுதல லோகத்தில் தள்ளப்படுவார்கள். இங்குதான் கடவுள் பக்தி கொண்ட மகாபலி மன்னன் ஆட்சி செய்கிறான். மூன்றடி மண் கேட்டு மகாபலியின் அகங்காரத்தை அடக்கி, வாமன அவதாரமாக வந்த மகாவிஷ்ணுவை மன்றாடிக் கேட்டுக் கொண்டதனால், அவனை இந்திரனையும் விட பணக்காரனாக்கி சுதலலோகத்திற்கு அதிபதியாக்கி வைத்தார். இன்றும் அங்கு மகாபலி விஷ்ணுவின் நாமத்தை ஸ்மரணம் செய்து கொண்டிருக்கிறாராம்.

அதாவது உழவுத் தொழிலையே நம்பி உயிர் வாழும் உழவர் மக்களின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு அவர்களிடம் இருந்து அபகரித்து, அந்நிலங்களை அதிகவிலைக்கு விற்கும் அரசியல்வாதிகளும் மற்றும் அரசியல்வாதிகளை அவ்வாறு செய்யத் தூண்டும் தொழில் வர்த்தகர்களும் அவர்களது அடுத்த பிறப்பில் சுதல லோகத்தில் அப்பாவத்திற்குரிய தண்டனையை பெறுவார்கள். அப்படித்தானே கிங்கரர்களே !

ஆம். அப்படித்தான்.

தலாதல லோகம் மாயாவிகள் மற்றும் சூனியம் செய்பவர்கள் இவர்கள் இருவருக்கும் உருவாக்கப்பட்ட உலகம். இங்கு பேய்களின் சிற்பி மாயாவின் உலகம். மாயக்கலைகளில் சிறந்தவ்ன் சிவன். த்ரிபுரந்தகராக அவதாரம் எடுத்து சிவன் மாயாவின் மூன்று நகரங்களை எரித்து அழித்து, பின் மாயாவின் தபத்தில் மயங்கி, அவைனையே தலாதல லோகத்தின் அரசனாகி, அவ்வுலகை பாதுகாக்கவும் வரமருளினார்.

மகாதல லோகம். இங்கு அசுரர்களுக்கும், மற்றும் கோபப்படுபவர்களுக்கும் மறுபிறப்பு கிடைக்கும். பற்பல முக்காடிட்ட நாகங்கள் உள்ள உலகம் இது. இந்நாகங்கள் அனைத்தும் காந்த்ருவின் பிள்ளைகள் ஆவர். இந்நாகங்களின் தலைவன் குரோதவஷா. குரோதவஷா என்றால் எளிதில் கோபப்படுபவன் என்று பொருள். இவன் பருந்துக்கு பயப்படுபவன்.

ரசாதல லோகம் .. அசுரர்களின் ஆசான்கள் மற்றும் கொடுமைப் படுத்துபவர்களுக்காக ஸ்ரிஷ்டிக்கப்பட்ட உலகம். இங்கு வாழ்பவர்கள் தேவர்களின் நிரந்தர எதிரிகள். பாம்புகள் போல் துளைகளில் வாழ்வார்கள். தனவாஸ் மற்றும் தைத்யாஸ் போன்ற கொடுமையான பேய்கள் ஆட்சி செய்யும் உலகம்.

பாதாளலோகம் ..எவரொருவர் தன் சுயநலத்திக்காக ஒருவரையோ அல்லது பலரையோ, சின்னச்சிறு குழந்தைகளையோ அல்லது வயது முதிர்ந்தவர்களையோ, பெண்களையோ மற்றும் தொழிலாளர்களையோ பயமுறுத்தியும் அடிக்கடி அச்சுறித்தியும் வாழ்ந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட உலகம்.

இதை நாகலோகம் என்றும் சொல்வதுண்டு. வாசுகி என்ற பாம்பு தலைமை வகிக்கும் உலகம். இங்கு முக்காடிட்ட நாகங்கள் பற்பல உள்ளன. ஒவ்வொரு நாகங்களின் முக்காட்டிலும் விலையுயர்ந்த ரத்தினக்கற்கள் உள்ளன. அக்கற்களில் இருந்து வெளிவரும் ஒளியால் ஒளிரும் உலகம் பாதாளலோகம் ஆகும்.

- வளரும் -

எழுதியவர் : (30-Mar-14, 9:56 am)
பார்வை : 127

மேலே