இரவின் வெளிச்சம்
சுற்றிலும் பார்வைகளை ஓடவிட்டுக் கொண்டே கரைகின்றது ஒரு மௌனம் ...இன்றில்லாமல் எப்போதும் இது நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.இந்தக் காரணமும் இப்போது தானே.அவர் என்ன செய்து கொண்டிருப்பார் இந்நேரம் .அவர் அங்கே... நான் இங்கே...இந்த இரண்டு நாட்கள் இவ்வளவு தூரமா?!இன்று இரவே வந்துவிடுவதாய்க் கூறிவிட்டுச் சென்றவர் , வேலை இன்னும் முடியவில்லை தங்கம் , என்று அலைப்பேசியைக்கொஞ்சிக் கொண்டிருக்கின்றார்.அவர் தாமதிக்கும் இரவுகளில் கூட இவ்வளவு பாரம் அவளை அழுத்தியது இல்லை.இத்தனை தவிப்பும் எனக்குள் எப்படி இப்படி முளைவிட்டுக்கொண்டே இருக்கின்றது என்றபடியே நிதானம் பயில்கின்றாள்.அலைப்பேசியை அவர் துண்டித்தது தான் தாமதம் .விர்ரென்று ஒரு வெறுமை உடலெங்கும் பரவி இருப்புக்கொள்ளவிடாதல்லவா செய்கின்றது.ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அழைப்பதாக சொல்லியவருக்கு நினைவு பிறழ்ந்துவிட்டது போல.இரண்டு மணி நேரம் ஆகப் போவதாய் கடிகார முள் ஒவ்வொரு நொடியையும் வெட்டி வெட்டி நகர்ந்துகொண்டிருந்தது அவளையும் சேர்த்தே.வேறெங்கு திரும்பிப் பார்த்தாலும் சட்டென அலைப்பேசிக்குள் முகம் பார்க்கத் துடிக்கும் ஆவல் . அவர் அழைத்து எங்கு கண்டிராது போய்விடுவோமோ என்ற அச்ச உணர்வுக்கு இப்படி இரையாகிக் கொண்டிருந்தாள். இரவினை முழுமையாக உணர்ந்து கொண்டிருந்தது அந்த அறை....
விசும்பத் தொடங்கிவிட்டாள் தலையணையோடு புதைந்து ….சுற்றியிருக்கும் சுவர்களுக்குக் கூட அவளை அரவணைக்க வாய்ப்புக்கள் இல்லை.திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன நிலையில் புகைப்படக் கருவிகள் கூட அவ்விடம் தம்மை வைத்திருக்கவில்லை .ஒருவேளை அவையேனும் கூட அவளுக்கான வைத்தியம் பார்த்திருக்கக் கூடும்.அவரின் முகம் வந்து வந்து போய்க்கொண்டே இருந்தது .அறை முழுவதும் நிரம்பிக் கிடக்கின்ற அவளின் அவரைக் கலைக்கவே இல்லை .காட்சிப்படுத்திக்கொண்டே தான் இருக்கின்றாள் .மெதுவாக தலை தூக்கியவளுக்கு எதிரே வழக்கமாய் அவர் அமர்ந்து வேலை செய்யும் மேசையில் மடிக்கணினியின் அச்சு இருப்பதாக ஒரு தோற்றம் . கூடவே அந்த நாற்காலியையும் கண்டவள் மெல்லத் துணுக்குற்றாள்.கார்த்திக் …............
இன்னொரு முறையும் கூட அழைக்கவேண்டும் என்றால் , கார்த்திக் நேரிலேயே வந்துவிடக் கூடும்.தன்னைச் சற்றே தேற்றிக்கொண்டவளாய் எழுந்து உட்கார்ந்தவளுக்கு பசியெடுக்கும் உணர்வு.சாப்பிடத் தான் வேண்டுமா ? இல்லை , ஆனால் என்னவோ போலிருந்தது .சொல்லக்கூட தெரியாதவளுக்கு சுவர் ஏது........
முகம் முழுக்கக் கண்ணீர்க் கோர்வைகள் இட்டுச் சென்ற தடங்கள் , காய்ந்துகொண்டு இருப்பது நன்றாகவே தெரிந்தது அதன் நாசி தடவும் நுகர்வில்..தனக்குத் தானே பதிலுரைத்துக் கொள்ளும் தைரியக்காரி . காயத்ரி ….... இதோ அவளின் நிழல் தன்னை மறைத்துக்கொண்டு வெளிச்சத்தில் சுருங்கிக்கொண்டே போகின்றது . சமையலறைக்குள் வெறுமனே காபித் தூள் டப்பாவையும் ,சர்க்கரை டப்பாவையும் பார்த்துப் பார்த்து எடுத்துக்கொண்டிருந்தாள். அடுப்பில் பால் சூடேறியிருக்க வேண்டும் பாத்திரம் தனது முகம் சிவந்துவரப் பால் பொங்க எத்தனித்தது .அடுப்பை அணைத்துவிட்டு , கடமைக்காய் பாலை காபிக்கான பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.கவனம் தவறிப்போனவள் பாத்திரத்தைப் போட்டே விட்டாள்.அது பாய்ச்சலில் அவளின் காலை நோக்கி விழுந்து லேசான அடி.ஆனால் விழுந்ததும் ஒரு சத்தம் வருமே அப்பப்பா அது அவளுக்கு பிடிக்காத ஒன்று.காதுகளிரண்டையும் பொத்திக்கொள்ள வேண்டும் போலிருக்கும் .ஒருவித எரிச்சலும் இப்போது பதம் பார்த்துக் கொண்டிருந்தது காயத்ரியை.குனிந்து பாத்திரத்தை எடுத்து விளக்கிக் கழுவுமிடத்தில் போட்டுவிட்டு அவளுக்கான காபியுடன் ஹாலில் வந்தமர்ந்தாள்.லேசான வலி இருப்பது நடக்கும் போதே தெரிந்தது.அந்த உதடுகளில் ஒரு புன்னகை ?!ஊஹூம் ….....அவிழாத மொட்டொன்று வாடிக்கொண்டே இருப்பதாக ஒரு ஓவியம் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் ஜன்னலோரத் திரையில் …......
படுக்கையறைக்குள் நுழைந்தவளின் கண்களில் தனது அலைப்பேசியில் பச்சை நிற ஒளித்துடிப்பு பக்கவாட்டில் மின்னிக் கொண்டிருப்பதைக் கண்டதும் நிச்சயம் கார்த்திக்காகத் தான் இருக்க வேண்டுமென லாக்கை எடுத்துவிட்டுப் பார்த்தால் வோடபோன் மெசேஜ்.மணி பனிரெண்டைத் தொட்டிருக்கும்..இனி அவரிடமிருந்து எந்தத் தகவலும் வராது எனத் தீர்மானித்தவள் அவருக்கான தலையணையை வருடிக்கொண்டே குப்புறப் படுத்திருந்தாள்..ஆனாலும் இந்தப் பெண்மனம் அடங்கிவிடுமா ? ஏதோ ஒரு உணர்வுக்குரல் எழுந்து போ ஹாலுக்கு என்று உந்தித் தள்ளியது.இருப்பினும் அரைமனதோடு தனது உடைகளைச் சரிசெய்தவாறு ஹாலை நெருங்கி நிமிரும்போது கார்த்திக் தனது ஷூக்களைக் கழற்றிவிட்டு ஷாக்சுடன் ….......
நெஞ்சம் இந்தளவில் ஆர்ப்பரித்துத் துளிர்த்தெழுமா ? செய்வதறியாது நின்றுபோனாள் காயத்ரி …... மனம் முழுக்க கார்த்திக்....எதிரே அவன் எதுவுமறியாது.......அவனோ அவளைக் கண்டதும் , அய்யோ செல்லம் இன்னும் தூங்கலையா ?! உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு தான் ….......கார்த்திக் என்று ஓடியவள் அவனைக் கட்டிக்கொண்டேவிட்டாள்.என்னம்மா ஏன் முகமெல்லாம் கூட ….....பேசாதீங்க உங்கமேல அவ்ளோ கோபம்.ஏன் என்னை மறுபடியும் அழைச்சுப் பேசல , ஒரு மெசேஜ்ஜாவது தந்திருக்கக் கூடாதா.....அந்தத் துடிப்பும் வாட்டமும் ஒரு குழந்தையாகவே அவளை மாற்றிவிட்டிருந்தது.மிரட்சியில் அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் கண்களை ஆழமாக ஊடுருவத் தொடங்கினான் கார்த்திக்....கொஞ்சலாய் இழுத்து அணைத்துத் தலைவருடித் தாலாட்ட விலகிச் சென்றது வெறுமையுடனான ஒரு தென்றல்........ முதல் காதலின் வாசம் அறையெங்கும் தன்னைப் படர்த்திக் கொண்டிருந்தது.......