கரு-று-ப்பு ஆடுகள் ----அஹமது அலி----

அண்ணன் தம்பியென அன்பு வளர்த்து
மாமன் மச்சானென உறவு தொடுத்து
தோழன் தோழியென நட்பு பகிர்ந்து
வேற்றுமையறியாமல் ஒன்றானோம்!
/0/
வாழும் முறைகள் வெவ்வேறாயினும்
வணக்க முறைகள் வெவ்வேறாயினும்
வளர்த்து வந்தோம் சகோதரத்துவம்-அதை
குலைக்கப் பார்க்குது தந்திரத் தத்துவம்!
/0/
மனிதம் பேசுவார் வாய் கிழிய
மனத்துள் குரூரம் வழிந்தோடிட
மதங்களை துறந்ததாய் அறிவிப்பார்
மதம் பிடித்து அனலாய் கொதிப்பார்!
/0/
வாய்ச் சொல்லில் வீராதி வீரர்கள்
சகுணிக்கு சரியான தோழர்கள்
அமைதிக்கெதிராக செய்வர் கலகம்-இவர்
அறிவாளி முட்டாள்களின் கழகம்!

/0/
பூனையை பிடித்து வந்து முயலென்பார்
பூனையை முயலாக்க முயலவும் செய்வார்
பேனை பெருச்சாளியாக்கி சாதனை கொள்வார்
அச்சாதனையில் புகழுயர்த்தி பூரிப்பார்!
/0/
வெள்ளாட்டு மந்தையில் ஒளிந்த
கருப்புச் சட்டையிட்ட கரு(று)ப்பு ஆடுகள்
வெள்ளாடுமல்ல! வெள்ளையுமல்ல!!
சொல்லில் தேடித் திரியும் கேடுகள்!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (3-Apr-14, 10:22 am)
பார்வை : 446

மேலே