தூரங்களுக்கு அப்பால் தொலைந்தவன்

நிலவு பூக்கத் துவங்கும்
நித்திரைக்கு முன் வேளையில்,
கடகடவென கடந் தொடும்
கார் மேகங்களுக் கிடையே
உருவம் தேடும் உறவு
எனக்கும் அவனுக்கும்....!

கொசு ரீங்காரம் குசலம் கேட்கையில்
அசைய மறந்த மரங்களுக்கிடையே
முகில் விலக்கி விண்மீன்
எண்ணுவோம் நானும் அவனும்...!

அப்படி அப்படி என அவனும்,
இப்படி இப்படி என நானும்,
அலுவலக அல்லல்கள் பகிராத
நாளொன்றும் இருக்காது நாள்காட்டியில்...!

பகுத்தறிவும், பசியும், அழையா
விருந்தாளி எங்களுக்கு.. நட்டநடுநிசி
மொட்டைமாடி உரையாடலில்..

அவனுக்கென்றே வயிறு பெருக்கும்
என் புத்தக அலமாரி !...
நேர்முக தேர்வுக்கென எனக்காகும்
அவன் முழுக்கை சட்டை!...

என் கிறுக்கல்களின் பெருங்குறை
சுட்டிக்காட்டும் உரிமையை
அவனும்,
அவன் புதுக் கவிதைகளின்
முதல் ரசிகனாகும் முன்னுரிமையை
நானும்,
கேட்காமலே எடுத்துக்கொள்வோம்...

என் நினைவுக் கிடங்கின்
எல்லைவரை விரிந்து கிடக்கும்
நட்புக்கு சொந்தக்காரன் ..

குக்கூவென குயிலிசை பேசுவான்,
குளமென்று வறட்சி கூறுவான்,
புதுக்கவிதை எழுதும் புதியவன்.
"ழ"கர பிரியன்
தமிழ் ரசிகன்...

நேற்றைக்கு முந்தைய, முன்னொருநாளில்
அறை மாறிச்சென்ற அந்நாளில்,
அதோ ! அந்த...
நட்பூ பூக்கும் புதர்களுக்கிடையே
பொன்னியின் செல்வன் புதினத்திற்க்குள்
புதைந்து கொண்டிருந்தான் அவன்.....

அவன்.... என் நண்பன்.

எழுதியவர் : அமுதன் பரிமளசெல்வன் (4-Apr-14, 6:45 pm)
பார்வை : 137

மேலே